கிரிக்கெட்டை விட்டு கபடியை விளையாடுங்கள் : விஜய்சேதுபதி சூசகம்

Rate this post

தமிழக இளைஞர்கள் வெளிநாட்டின் கிரிக்கெட் போட்டியை விட்டு, தமிழர்களின் கபடி போட்டியை விளையாடுங்கள் என நடிகர் விஜய்சேதுபதி சூசகமாக தெரிவித்தார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் விவோ புரோ கபடியின் 6-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இதனால், தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் தலைமையில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் புரோ கபடி போட்டிக்கான தமிழகத்தின் முகமாக நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டார். இந்த விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசுகையில், “கபடி நம் தமிழர்களுடைய விளையாட்டு. நம் வரலாற்றோடும் பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்த ஒன்று. இந்த வருட புரோ கபடி சீசனில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் முகமாக இருந்து இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம் தமிழர்களுடைய விளையாட்டான கபடியை நாம்தான் மேம்படுத்தவேண்டும். கிரிக்கெட்டையும் தாண்டி கபடி அனைத்து இடங்களையும் சென்றடைய வேண்டும். இம்முறை நானும் மைதானத்துக்கு வந்து போட்டியை கண்டுகளிப்பதுடன் வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளேன்” என்றார். தமிழ் தலைவாஸ் அணியில் உள்ள 20 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த சி.அருண், டி.கோபு, பிரதாப், ஜெயசீலன், பார்த்திபன் ஆகிய 5 பேர் இடம் பிடித்துள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும்அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*