உலகம்

கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

பீஜிங்,

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. 14-ந் தேதி முடிகிறது.

இந்த மாநாட்டின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார்.

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை கடந்த 30-ந் தேதி ஏற்றார். அதன் பிறகு மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடத்தப்போகிற முதலாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் ஜின்பிங்கின் கிர்கிஸ்தான் பயணம் பற்றி, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லு காங், பீஜிங்கில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரையில் அதிபர் ஜின்பிங், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிஷ்கேக் நகரில் 13-ந் தேதி தொடங்குகிற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அதிபர் ஜின்பிங் கலந்து கொள்கிறார்” என கூறி உள்ளார்.

சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். கடந்த ஆண்டு இரு தலைவர்களும், பல்வேறு நிகழ்ச்சிகளின் இடையே 4 முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28-ந் தேதிகளில் வூகன் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசிய பிறகுதான் டோக்லாமில் (இந்திய சீன எல்லை) 73 நாட்களாக முற்றுகையிட்ட சீனப்படையினர் திரும்பச்சென்றனர். போர் பதற்றம் முடிவுக்கு வந்தது.

வூகன் உச்சி மாநாட்டுக்கு பின்னர்தான் இந்தியாவும், சீனாவும் இரு தரப்பு உறவை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

கடந்த டிசம்பர் மாதம் அர்ஜென்டினாவில் ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே இவ்விரு தலைவர்களும் சந்தித்து, பரஸ்பர நம்பிக்கை, நட்பு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அபார வெற்றி பெற்றபோது, தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பாகவே ஜின்பிங் அவரை தொடர்பு கொண்டு பேசி தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஷாங்காய் உச்சி மாநாட்டின்போது, மோடியும், ஜின்பிங்கும் சந்தித்து பேசுகிறபோது, அது இரு தரப்பு உறவை புதிய உச்சத்துக்கு அழைத்துச்செல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Comment here