கதை

கீதை இனவாதம் பேசுகிறது ??

5 (100%) 1 vote

 

                             “சூத்திரர்கள் எல்லாம் பாபம் செய்தவர்கள் என்று கீதை இனவாதம் பேசுகிறது” என்பது இந்து விரோதக் கருத்தியலைத் தொடர்ந்து பரப்பி வரும் குழுக்களின் ஒரு வாதமாகும்.  இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை.

மாம் ஹி பார்த்த2 வ்யபாஶ்ரித்ய 
யேSபி ஸ்யு: பாயயோனய: 
ஸ்த்ரியோ வைஶ்ய: ததா2 ஶூத்ரஸ்-
தேSபி யாந்தி பராம் க3திம். 

(பார்த்த2) பார்த்தா! (ஸ்த்ரிய:) பெண்களும் (வைஶ்யா:) வைசியர்களும் (ததா2) அவ்வாறே (ஶூத்3ரா:) சூத்திரர்களும் (பாயயோனய: யேSபி ஸ்யு:) பாவப்பிறவியினராக எவர்களுண்டோ (தேSபி) அவர்களும் கூட (மாம்) என்னை (வ்யபாஶ்ரித்ய) சரணடைந்து (பராம் க3திம்) உயர்ந்த நிலையை (யாந்தி ஹி) அடைகின்றனர் அன்றோ?

இது உரையாசிரியர் ஸ்ரீ அண்ணா (ராமகிருஷ்ண மடம்) தனது பகவத்கீதை உரையில் கொடுத்துள்ள சொற்பொருள்.

பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார்.

என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.

இதுவே சரியானதும் சம்ஸ்கிருத இலக்கணப்படி துல்லியமானதுமான பொருளாகும். பாவப்பிறவியினர் என்பது முன்னால் சொன்ன ஸ்த்ரீகள், வைசியர், சூத்திரர் ஆகியோருக்கு அடைமொழியாகக் கூறப்பட்டது என்ற வாதம் தவறானது, பொருத்தமற்றது – சம்ஸ்கிருத மொழியின் பன்முகப்பட்ட இலக்கண விதிகளை வைத்து அத்தகைய பொருள் பழைய உரைகளில் எழுதப்பட்டுள்ளது என்ற போதும். இங்கு ‘பாவப்பிறவியினர்’ என்பது தங்கள் தீவினைகளின் காரணமாக கொடிய நோய்களுக்கோ பெரும் துன்பங்களுக்கோ பாதகச் செயல்களுக்கோ ஆட்படும் பலதரப்பட்ட மக்களைக் குறிக்கிறது. அவர்களும் உயர்நிலையை அடைவர் என்பதே சுலோகத்தின் சாரம்.

இதற்கு முந்தைய மூன்று சுலோகங்களில் தான் எல்லா உயிர்களிடத்தும் சமமாக உள்ளேன் என்றும், தீய நடத்தை கொண்டனும் தன்னை அடைந்தால் நன்னெறியில் செல்வான் என்றும், தனது பக்தன் என்றும் (ஆன்மீக) அழிவை அடையமாட்டான் என்றும் பகவான் சொல்வதன் தொடர்ச்சியாகவே இந்த சுலோகம் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன் (9.29)

மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின், (9.30)

அன்னவன் விரைவிலே அறவானாவான்,
நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்!
என தன்பன் சாகமாட்டான். (9.31)

இந்த சுலோகங்களுக்கான விளக்கங்களில் ஸ்ரீ அண்ணா கீழ்க்கண்ட அற்புதமான ஒப்பீட்டு மேற்கோள்களையும் கொடுத்திருக்கிறார்.

“விருத்திராசுரன், பிரகலாதன், விருஷபர்வா, பலி, பாணன், மயன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வியாதன் (தர்மாத்மாவான ஒரு இறைச்சி வியாபாரி – மகாபாரதத்தில் இவரது கதை வருகிறது), கோபிகைகள், யக்ஞபத்னிகள் (ரிஷிகளான தங்கள் கணவர்களின் சொல்லை மீறி கண்ணனுக்கு உணவளித்த அந்தணப் பெண்கள்) – இங்ஙனம் வெகுபேர்கள் அந்தந்த யுகத்தில் ஸாதுக்களின் சேர்க்கையினால் என் ஸ்தானமடைந்தார்கள். இவர்களில் பலர் வேதங்களை அத்யயனம் செய்தவர்களல்லர். பெரியோர்களை உபாஸித்தவர்கள் அல்லர். ஸாதுக்களின் சேர்க்கை மாத்திரத்தால் ஏற்பட்ட ப்ரீதியால் என்னை அடைந்தார்கள் ”

– ஸ்ரீமத்பாகவதம் 11, 12. 5-8.

“நெருப்புடன் சேர்ந்தால் கரி தன் கறுப்பை இழந்து ஒளிவிடத் தொடங்குகிறது” – துளசிதாசர்

(வ்யாத4ஸ்ய ஆசரணம் .. எனத் தொடங்கும் சுலோகத்தைக் கொடுத்திருக்கிறார். அதை மொழிபெயர்த்துக் கீழே தருகிறேன்)

“வியாதனுடைய ஆசாரம் தான் என்னே!
துருவனுடைய வயது முதிர்ச்சி என்னே!
கஜேந்திரனுடைய கல்வியறிவு தான் என்னே!
விதுரனுடைய சாதிப்பெருமை தான் என்னே!
யாதவபதி உக்ரசேனனுடைய ஆண்மையும் வீரமும் என்னே!
(மதுரா நகரத்து) கூனியின் அழகு ரூபம் தான் என்னே!
சுதாமாவிடம் இருந்த பணச்செழிப்பு தான் என்னே!
பக்திப்பிரியன் மாதவன்
பக்தியில் மட்டுமே அவன் மகிழ்கிறான்
இத்தகைய அந்தஸ்துகளில் அல்ல”

– ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் (லீலாசுகர்)

“வித்யா கர்வமுள்ள ஜனங்கள் பிறருடைய பக்தியைப் பற்றி மூடபக்தி என்று கூறி அவர்கள் வழி தப்புவழி என்றும் கூறுவர். பக்தன் சிறுதுகாலம் அங்ஙனம் வழிதவறியே நடந்திருந்தாலும் பாதகமில்லை. அவனுக்கு என்ன வேண்டுமோ அதை ஈசுவரன் சீக்கிரமே கூட்டிவைப்பான்”  – ஸ்ரீராமகிருஷ்ணர்

“பாதியாய் அழுகிய கால்கையரேனும்
பழிகுலமும் இழிதொழிலும் படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்!
சாதியால் ஒழுக்கத்தால் மிக்காரேனும்
சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான்முகன் பணியப் பள்ளிகொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர் தாமே”

– பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருவரங்கக் கலம்பகம்

Related image

மேற்கண்ட பதிவை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் நான் எழுதியிருந்தேன். அதற்கு  எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு எதிர்வினையாற்றியிருந்தார் –  “என்ன சொல்கிறார்? அரங்கனைத் தொழாதவர் எல்லோரும் புலையர்கள் என்கிறார். புலையர்கள் என்றால் பாபங்கள் பல செய்து மிகவும் கீழ்நிலையில் இருக்கும் மனிதர்கள். ஐயங்கார் கூற்றுப்படி யாரெல்லாம் புலையர்கள்? முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சைவர்கள், நாத்திகர்கள், சீனர்கள் போன்ற உலகின் 90% மக்கள். இதற்கும் கிறித்துவப் பிரசாரத்திற்கும் என்ன வித்தியாசம்? கிறித்துவ மதமாவது 50% மக்களை ஏற்றுக் கொள்கிறது”.

அவருக்கு  நான் கூறிய பதில்:

இந்தப் பாடலை நீங்கள் பொருள் கொண்டிருக்கும் முறைமையே முற்றிலும் தவறு. உடல் ரீதியாக அருவருப்புக்குரியவர் *ஆயினும்*, உலகியல் சார்ந்த குலம் தொழில் ஆகியவற்றால் கீழாகப் பார்க்கப் படுபவர் *ஆயினும்*, அவர் அரங்கனுக்கு ஆட்பட்டவர் (தத்துவ ரீதியாக, பிரம்ம சம்பத்தை உடையவர்) என்றால், அவர் வணங்கத் தக்கவர் என்கிறார். இந்த *ஆயினும்* என்கிற conditional phrase தான் முக்கியமானது. இங்கு “புலையர்” என்பது சிறிய / கீழான என்ற பொருளில் வருகிறது – புல்லறிவாண்மை என்று குறளில் உள்ளது போல, ‘புழுத்தலைப் புலையனேன் தனக்கு’ என்று திருவாசகத்தில் மணிவாசகர் தன்னையே கூறிக்கொள்வது போல. யார் புலையர் என்னும்போது முதல்பாதியில் சொன்னவற்றுக்கு நேரெதிரான conditional phrase வருவதைக் கவனிக்க வேண்டும். உலகியல் ரீதியாக குலத்தாலும் நடத்தையாலும் உயர்ந்தவர் *ஆயினும்*, ஏன் வேதங்களை ஓதியவர் *ஆயினும்*, வேள்விகளை செய்தவர் *ஆயினும்* அவர் அரங்கனைப் போற்றவில்லை எனில் (பிரம்ம சம்பத்து இல்லை எனில்), அவர் கீழானவர். இங்கு புலையர் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரைக் குறிக்கவில்லை. சொல்லப்போனால், சமூக அந்தஸ்தின் அடிப்படையிலான மேல், கீழ் என்பதையே மறுதலிப்பது தான் இந்தப் பாடலின் கருதுகோள். “மேலிருந்தும் மேல் அல்லார் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்” என்ற திருக்குறளின் அதே கருத்தைத் தான் ஆன்மீகத் தளத்தில் தனக்கே உரிய மொழியில் இந்தப் பாடல் கூறுகிறது. தமிழறிந்தவர் இதற்கு இப்படித்தான் பொருள் கொள்வர். இந்தப் பாடல் தடாலடியாக விசுவாசி அசுவாசி என்று கிறிஸ்தவப் பாணியில் மக்களையே இரண்டு விதமாகப் பிரிவுபடுத்துகிறது என்பதாக நீங்கள் கூறுவது, வேண்டுமென்றே உங்களது இடக்கு வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகப் பாடலின் பொருளைத் திரிப்பதன்றி வேறில்லை.

******

இப்பதிவு தொடர்பாக நண்பர் ஆர்.வி உடன் நடந்த  உரையாடல்:

ஆர்.வி.  – நான் சமஸ்கிருதம் அறியேன். ஆனால் மாதராக இருந்தாலும், வைசிய சூத்திரராக இருந்தாலும் கூட என் பாதம் பணிந்தால் முக்தி என்று பொருள் என்றால் – வைசிய சூத்திரர் மற்றும் பெண்கள் கீழானவர் என்றுதானே பொருள் வருகிறது? அது என்ன “இருந்தாலும் கூட” என்று கேட்கத் தோன்றாதா என்ன? பிராமண க்ஷத்ரியர்களை, ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை, வைசிய சூத்திரர் மற்றும் பெண்களை குறிப்பாக சொல்ல என்ன தேவை என்று கேள்வி எழாதா? பாவிகள் என்று அவர்கள்தான் சொல்லப்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.

ஜடாயு – சூத்திரர்களும், பெண்களும் வேதங்களைக் கற்க அதிகாரம் இல்லை என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. வைசியர்களுக்கு வேதக்கல்வியில் அதிகாரம் இருந்தாலும் சமூக அந்தஸ்து பிராமண, க்ஷத்திரியர்களை விடக் குறைவு. இது அந்தக் காலகட்டத்திய சமூக யதார்த்தம்.எனவே இந்த உலகியல் காரணங்களால் ஆன்மீக ரீதியிலும் அவர்கள் குறைவு பட்டவர்களாவார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கு இல்லை என்றும் விடைசொல்லும் முகமாக *அவர்களும்* என்று கீதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறது. அதற்குப் பொருள் அவர்கள் எல்லாரும் பாவம் செய்தவர்கள் என்பதல்ல. விவாதத்திற்கு வருவதற்கு முன் கீதையின் இந்த அத்தியாயத்தையாவது கொஞ்சம் புரட்டிப் பார்த்திருந்தால் // பிராமண க்ஷத்ரியர்களை, ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை // என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள். அடுத்த சுலோகத்திலேயே அவர்கள் குறிப்பிடப் படுகின்றனர்:

அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக் கன்பராயின், என்னே! ஆதலால்;
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய். (9.33)

ஆர்.வி – நான் கீதை எல்லாம் படித்ததில்லை,படிக்க பெரிதாக விருப்பமும் இல்லை.ஆனால் நீங்கள் படித்திருக்கிறீர்கள். சுலோகம் சுலோகமாக மேற்கோள் காட்டுகிறீர்கள். வைசிய சூத்திரராக ‘இருந்தால் கூட’என்று வருகிறது, அடுத்த சுலோகத்தில் ‘அப்படி இருக்க’-அதாவது வைசிய சூத்திரருக்கே (அந்த ஏகாரம் ரொம்ப முக்கியம்) முக்தி என்று இருக்க ‘தூய்மையார்ந்த அந்தணரும் ராஜரிஷி’யைப் பற்றி சொல்லவே வேண்டாம் என்று வருவதெல்லாம் உங்களுக்கு தவறாகத் தெரியவே இல்லையா? என்னதான் படித்தீர்கள்? இரண்டு சுலோகத்தையும் இணைத்துப் பார்த்தால் வைசிய சூத்திரரைபாவ ஜென்மங்கள் என்று சொல்வதாகத்தான் தெரிகிறது. கீதை வருவதால் அதற்கு வரிந்து கட்டிக்கொண்டு சப்பைக்கட்டு கட்டாதீர்கள். குறைந்தபட்சம் பிற்கால இடைச்செருகலாக இருக்கலாம் என்றாவது சமாளியுங்கள்..

Image result for bhagavath geethai tamil

ஜடாயு – உங்களது பிரசினை தான் என்ன? கீதையின் சுலோகங்கள் இன்றைய அரசியல்வாதிகள் அல்லது தளுக்கு எழுத்தாளர்களின் பதிவுகளைப் போல அரசியல் சரிநிலையுடன் (political correctness) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது என்று நானே சொல்லியிருக்கிறேனே.. வேத அதிகாரம் இல்லாத இவர்களே பரகதியடைவார்கள் என்றால் சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது (இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல) பாவப்பிறவிகள் என்ற வாசகம் முன்பு சொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து வேறு ஒரு தரப்பினரைக் குறிப்பிடுகிறது என்று ஸ்ரீ அண்ணாவே தெளிவாக விளக்கியிருக்கிறார். எனவே இதில் சப்பைக்கட்டு எதுவுமில்லை. கீதை என்பது பிரம்ம வித்தை, உயர்ந்த சாஸ்திரம். நீங்கள் இங்கு “பரிந்துரைப்பது” போன்ற காமெடியான சப்பைக்கட்டுகள் (பிற்சேர்க்கை இத்யாதி..) எல்லாம் அதன் உன்னதத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையில்லை.

–  ஜடாயு

Comment here