உலகம்

குகையிலிருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்கள்!-

Rate this post

தாய்லாந்து தாம் லுவாங் குகைக்குள் சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் உட்பட 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் மா சே என்ற நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. தாய்லாந்து நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அந்தக் குகை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துக் காணப்படுகிறது. இதனிடையே கடந்த வாரம் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற கால்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்கள் உட்பட 25 வயதான பயிற்சியாளர் ஒருவரும் கனமழைக் காரணமாக தாம் லுவாங் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனிடையே, அவர்களை மீட்பதற்காக தாம் லுவாங் குகையின் சில பகுதிகளில் துளையிட்டு அதன் வழியாக குகைக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற, முடிவு செய்யப்பட்டது. மேலும், குகைக்குள் சிக்கியவர்களுக்குப் பிராண வாயு சப்ளை செய்யவும், அதற்காக குகைக் கற்களில் துளையிடவும் முடிவு செய்யப்பட்டது.

 

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு முதற்கட்டமாக 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. 2-ம் கட்டமாக 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்டனர். மற்றவர்களையும் மீட்கும் பணித் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் 3-ம் கட்டமாக இன்று பிற்பகல் மேலும் 3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிக் காரணமாக மற்ற ஒரு சிறுவனும், 25 வயதான பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குகைக்குள் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதால் சிறுவர்களின் பெற்றோர்களும், பயிற்சியாளரின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன், மீட்புப் பணியிவ் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Comment here