Sliderகதை

கூடாவொழுக்கம்


ஓர் அதிகாரம்- ஒரு குறள்- ஒரு கவிதை
– – – – – – – – – – – – – –
அதிகாரம்- 28 (கூடாவொழுக்கம்)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

கூரான அம்பு நேரானது!-
ஆனால்,
கொலையெனும் கொடிய செயல்செய்வது!
சீரான யாழோ வளைவானது!-
ஆனால்,
தேனிசை சிந்திச் சுகம்ஈவது!

தோற்றத்தை வைத்தே எடைபோடுதல்,
தோற்றுத்தான் போகும் பிழையாகுமே!
ஆற்றிடும் செயலால் ஆள்யாரென
அறிந்துநீ உணர்வதே சரியாகுமே!

தூய துறவிபோல்
தோற்றம் தருவோனும்
மாய வேலைகள்
மறைவாய்ச் செய்யலாம்

பித்தனைப் போலச்
அற்பமாய்த் தெரிவோனும்
சித்தனாய் முத்தனாய்ப்
புத்தனாய் இருக்கலாம்.

ஆதலால்,

கோலத்தைப் பார்த்துக்
கும்பிட்டு விழாதே!
சீலத்தைச் செய்கையைத்
தேர்ந்தபின் வழிபடு!

காஷாயம் பூண்டு கடவுள்நிலை கண்டாற்போல்
பாசாங்கு செய்வோர் பலர்.

Comment here