சபாநாயகர் உத்தரவில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா? அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது

5 (100%) 2 votes

ஆந்திராவில் 5 எம்எல்ஏக்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட ஆந்திர உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதையடுத்து, ஆந்திர எம்எல்ஏ சம்பத்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா? அதற்கு அதிகாரம் இருக்கிறதா? என்றும், சபாநாயகரின் முடிவில் எந்த அளவுக்குத் தலையிட முடியும்? என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து ஆந்திர எம்எல்ஏ தொடர்ந்த மனுவை அடுத்த மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திர எம்எல்ஏ சபாநாயகரின் அதிகாரம் குறித்து மனு தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளதாக கூறி வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*