உலகம்

சமையலறைக்குள் தஞ்சமடைந்த கணவன்கள்

வருங்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்

காய்கறி சந்தைகளாய்
மாறிப்போன
பேருந்து நிலையங்கள்

நடமாடும் மருத்துவமனைகளாக
மாறிப்போன
ரயில் பெட்டிகள்

கதவடைக்கப்பட்ட
வழிப்பாட்டு
தலங்கள்

காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
மருத்துவ பணியாளர்கள்

தீண்டாமை ஒரு
புண்ணிய செயலென
மாற்றிய நுண்ணுயிரி

இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த திருமணங்கள்

சாலை விபத்துகள் பற்றிய
செய்திகளின்றி
வெளியாகிய செய்தித்தாள்கள்

காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த
திரையரங்குகள்

சமையலறைக்குள்
தஞ்சமடைந்த கணவன்கள்

சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில்
நேரம் செலவழித்த மனைவிகள்

பரபரப்புகளில் ஓடி திரிந்து
நிதானத்தை
பழகி கொண்ட
இன்றைய தலைமுறையினர்

தானாகவே குறைந்து
போன
காற்றின் மாசு

சுதந்திரமாய்
சுற்றி திரிந்த
பறவைகளும் விலங்குகளும்

பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி
குடும்பமாய் மாறிய குடும்பங்கள்

இவற்றோடு
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய
நாடோடி உழைப்பாளிகளின் கால்கள்

எழுதி வையுங்கள்
இல்லையெனில்
வருங்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்

Comment here