சினிமாவை வாழ வைத்த தயாரிப்பாளர்கள் !

Rate this post

ஒருமுறை பிரபல எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு படம் வெளியிட கடனாக கடைசி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்கள் கே.எஸ்.ஜி அவர்களை பிரபல திரையுலக ஜாம்பவான் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்களிடம் அழைத்துச் சென்றார்.

அவருடைய நிலமையைச் சொல்லி பணம் கேட்டார். அதற்கு வாசன் எஸ்.எஸ்.ஆரிடம் பணம் கொடுப்பதற்காக ஒரு நிபந்தனையை சொன்னார். இவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
ஆனால் அந்த நிபந்தனை என்ன என்பது கே.எஸ்.ஜி அவர்களுக்கு தெரியாது. அவருடைய நிலமை அந்த சமயத்தில் மிகவும் மோசமாக இருந்தது.

படம் வெளியாகி வெற்றியும் லாபமும் கிடைத்தது. வாசன் அவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க அவரை தொடர்பு கொண்டபோது, வாசன் அவர்கள் இதைப்பற்றி எஸ்.எஸ்.ஆரியம் சொல்லி உள்ளேன், அவரிடம் கேட்டுக் கொள் என்றார்.

கே.எஸ்.ஜி உடனே எஸ்.எஸ்.ஆரிடம் வந்து பணத்தை கொடுத்தார். அதை வாங்க மறுத்தவர் வாசன் அவர்கள் சொன்ன நிபந்தனையை சொன்னார்.

அதை கேட்ட கே.எஸ்.ஜி. அதிர்ந்து போனார்.

” இந்த பணத்தை கே.எஸ்.ஜி. எனக்கு திருப்பி தர தேவை இல்லை. அதற்கு பதில் இதே போல் வேறு ஒரு தயாரிப்பாளர் பட வெளியீட்டிற்கு கஷ்டப்படும் போது அந்த பணத்தை அவருக்கு கொடுத்து உதவ வேண்டும்” என்று வாசன் அவர்கள் சொன்னதாக தெரிவித்தார் எஸ்.எஸ்.ஆர்.

சில வருடங்கள் கழித்து கே.எஸ்.ஜி. அவர்கள், அதே போல வேறு ஒரு தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவியதாக தகவல் வந்தது.

எம்.ஜி.ஆர். – சிவாஜி,ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன், கமல் – ரஜினி, கார்த்திக் – பிரபு, விஜயகாந்த் – சத்யராஜ், போன்றவர்கள் கால கட்டங்களில் தற்போது நடந்து வரும் தயாரிப்பாளர் – நடிகர்கள் சம்பள பாக்கி மற்றும் ஒத்துழைப்பு தராமல் இருப்பது என்பது போன்று இருந்தது இல்லை.

இப்படி சுயநலமாகவே இருந்தால் எப்படி சினிமா வாழும் ?

டி.எஸ்.ஆர்.சுபாஷ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*