சினிமா

சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மணிரத்னம் கடிதம்

புதுடெல்லி

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. “ஜெய் ஸ்ரீராம்” என்ற பெயரில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருவதால் நாட்டின் ஒரு பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.

வட மாநிலங்களில் “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. இதில் பலர் பலியாகி உள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லீம் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் “ஜெய் ஸ்ரீராம்” வார்த்தைக்காகவும் “பசு”வுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விசயம். இதுபோன்ற சம்பவங்களை தடுத்து மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்.

2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில் வெறுக்கத்தக்க கிட்டத்தட்ட 254 சம்பவங்கள் மதங்களின் பெயரால் குற்றங்கள் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 840 குற்றச் சம்பவங்கள் தலித்துக்கு எதிராக மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

மதத்தின் பெயரால் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.

கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது என்றும், தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தைப் ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், ஆளுங்கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என எந்த பொருளும் இல்லை என்றும், ஆளுங்கட்சிக்கு விரோதமாக விமர்சனங்களை வழங்குவது தேசத்துக்கு விரோதமாக கருதப்பட முடியாது என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரபலங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்ப்பை நசுக்காத தேசமே பலமான தேசம் எனக் கூறியுள்ள அந்தக் கடிதத்தில் ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் மற்றும் மணிரத்னம் போன்ற பெரிய பெயர்கள் உள்ளன. சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Comment here