தமிழகம்

சிறுவாணியில் அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

                        சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் எதுவும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், ”ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்ற நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையேயான இப்பிரச்சினையில் தமிழக அரசின் கருத்துக்களை கேட்காமலேயே சுற்றுச்சூழல் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடந்த மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்ற இந்த மத்திய நிபுணர் குழு கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவில்லை.

காவிரியின் துணை நதியான சிறுவாணி இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுகிறது. சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என கடந்த 21-6-2012-ல் பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் அணை கட்டுவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானதாகும்.

சிறுவாணியில் அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் தொழில்நுட்ப அனுமதி அளிக்கக் கூடாது என ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் கேரள அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்ற நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் 96-வது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சிறுவாணியில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பது தொடர்பாக எதுவும் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. பலமுறை கடிதம் அனுப்பப்பட்டதாக வந்த தகவல் தவறானது. நிகழ்ச்சி நிரலில் வைக்காமலேயே சிறுவாணி பள்ளத்தாக்கில் சுற்றுச்சூழல் ஆய்வுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் எந்த திட்டத்தையும் கர்நாடகம் மற்றும் கேரள மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

எனவே, சிறுவாணியில் கேரளம் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த நதிநீர் பள்ளதாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு மத்திய சுற்றுச்சூழல், வனம், நீர்வளத் துறை ஆகிய அமைச்சகங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்” என்று ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comment here