ஆன்மிகம்

சுக்ரன் தரும் மாளவிய யோகம்

Rate this post
மாளவிய யோகத்தை அளிப்பவர் சுக்ரன். அதாவது, அவரது ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் மற்றும் உச்ச வீடான மீனம் ஆகியவற்றில் சுக்ரன் அமர்ந்த நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது சந்திரன் ஆகியவற்றிற்கு 1,4.7,10 என்ற கேந்திர வீடுகளாக அமைந்திருந்தால் மாளவிய யோகம் உண்டாகிறது.
இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் கலைத் துறையில் ஏதாவது ஒரு வகையில் புகழ் பெறுவார்கள். இனிய வாழ்வு, அழகான மனைவி, செல்வம், செல்வாக்கு, ஆடை, ஆபரணங்கள், பெண்களால் அனுகூலம் போன்ற சிறப்புகளை பெறுவார்கள். சந்தோஷத்தை அனைத்து வழிகளிலும் தேடி அதை அடைந்து மகிழ்வார்கள். இயற்கையாகவே அழகான உருவ அமைப்பு மற்றும் மன பலம் கொண்டவர்களாகவும், வாகனங்களால் நன்மை பெறுபவர்களாகவும் இருப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. மாளவிய யோகம் கொண்டவர்கள் பிறந்த பின்னர் அவர்களது குடும்பத்திற்கு பெரும் செல்வம் சேரும் என்று பரவலான ஜோதிட நம்பிக்கை உள்ளது.
ஒருவரது லக்னம் வலிமையாக அமையாத நிலையில், ராசியை வைத்து பலன்களை தீர்மானிக்கும் முறைப்படி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் ஏற்படும் மாளவிய யோகத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது இன்றைய ஜோதிட வல்லுனர்கள் பலரது கருத்தாகும். குறிப்பாக, எந்த லக்னமாக இருந்தாலும் மாளவிய யோகம் அமைந்தவர்களுக்கு அவரது மத்திய வயதுகளில் சுக்ர தசை அல்லது புத்தி நடப்பில் வந்தால், சுக்ரனின் காரகத்துவ நன்மைகள் சிறப்பாக கிடைக்கும். அதாவது, திருமணம், வீடு, வாகனம் போன்ற அடிப்படைத் தேவைகள், கலைத்துறை, உணவு விடுதிகள், ஜவுளி, ஆடம்பரப் பொருட்கள், மனைவி வழியில் லாபம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.
பல கலைகளில் ஈடுபாடும், ஒரு சில கலைகளில் நிபுணத்துவமும் பெற்றிருப்பார்கள். சிறந்த கலா ரசிகர்களாகவும், பிற உயிரினங்களின் மீது பிரியமும், இரக்கமும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் இனிமையாக பழகுவார்கள். ஒரு சிலர் பிரபல வைர வியாபாரிகளாக இருப்பார்கள். நறுமண திரவியங்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் இவர்களுக்கு லாபத்தை கொடுக்கும். இவர்கள் அழகான தோற்றம் கொண்ட வாழ்க்கை துணையை பெற்று, இனிமையாக வாழ்வார்கள்.

Comment here