இந்தியா

சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் – 1951

Rate this post

ந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தல் ஒரு திருவிழா போன்றே இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிய பணியாக அமையவில்லை. இந்த தேர்தலில் ஜனநாயக கடமையான வாக்களிப்பது பற்றி பலருக்கு போதிய அறிவும் அனுபவமும் இல்லை.

சில அடக்கி ஒடுக்கும் கொள்கைகளால் ஆளப்பட்டு வந்த லட்சக்கணக்கானோர் தங்களது அரசை தேர்வு செய்யும் உரிமை பெற்ற வாக்காளர்களாக ஆனார்கள்.

வாக்களிக்க குறைந்தபட்ச வயது 21 ஆக இருந்தது. ஆனால் 85 % மக்களுக்கு எழுத, படிக்க தெரியாது. இதனால் அரசியல் கட்சிகளின் பெயர்களை படிப்பது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. இதனை தீர்க்க கட்சிகள் சின்னங்களை பயன்படுத்தின. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது காளைகள் சின்னமும், பார்வர்டு பிளாக் கட்சியானது கை சின்னமும் பயன்படுத்தின. இவை மக்களை எளிதில் சென்றடைந்தன.
இந்தியா அந்த காலக்கட்டத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு சமூக கட்டுக்கோப்புடன் இருந்து வந்தது. இதனால் பெண்கள் பலர் தங்களது சுய அடையாளத்தினை பயன்படுத்துவதற்கு பதிலாக தங்களை,  இவரது தாய் அல்லது இவரது மனைவி என பதிவு செய்து கொள்ளவே விரும்பினர். இந்த காரணங்களால் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்த இந்த பட்டியலில் இருந்து 28 லட்சம் பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் பிரசாரங்கள் பெரிய அளவில் நடந்தன. பொது கூட்டங்கள் நடத்தப்பட்டன.
வீடு வீடாக சென்றும் உறுப்பினர்கள் வாக்குகளை சேகரித்தனர். வாக்களிப்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டாகுமெண்ட்ரி படம் ஒன்று தயார் செய்யப்பட்டு 3 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதுபற்றி ராமசந்திரா குஹா என்பவர் தனது, காந்திக்கு பின் இந்தியா என்ற புத்தகத்தில், மேற்கு வங்காளத்தில் கல்கத்தா (கொல்கத்தா) நகர தெருக்களில் சுற்றி திரியும் பசுக்களின் முதுகுபுறங்களில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்தன என தெரிவித்து உள்ளார்.
தேர்தலுக்காக 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் 16,500 எழுத்தர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவற்றை அச்சிட 3 லட்சத்து 80 ஆயிரம் கட்டுகள் கொண்ட காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தலுக்காக இப்பொழுது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் குண்டுகள் துளைக்காத மற்றும் உடைக்க முடியாத 20 லட்சம் வாக்கு பெட்டிகள் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டன. இதற்காக 8 ஆயிரத்து 200 டன் எஃகுகள் பயன்படுத்தப்பட்டன.
 
ஆள்மாறாட்டத்தினை தவிர்ப்பதற்காக இந்திய விஞ்ஞானிகள் அழிக்க முடியாத ஒரு வகை மையை கண்டுபிடித்தனர். இந்த மையை வாக்காளர்களின் விரலில் வைத்தபின் ஒரு வாரம் வரை அழியாமல் இருந்தது. இமாசல பிரதேசத்தில் உள்ள சினி என்ற பகுதியில் வாழ்ந்து வந்த புத்த மதத்தினர் முதன்முறையாக வாக்களித்த இந்தியர்கள் ஆவர். அவர்கள்  1951ம் ஆண்டு அக்டோபர் 25ல் வாக்களித்தனர். எனினும் மற்ற வாக்காளர்கள் சில மாதங்கள் கழித்து 1952ம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதன்பின் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் முதல் மக்களவை தேர்தல் அக்டோபர் 25, 1951 மற்றும் பிப்ரவரி 21, 1952 வரை 4 மாதங்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் 21 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். முதல் தேர்தலிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 364 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 47,665,875 ஓட்டுக்கள் காங்கிரசுக்கு கிடைத்தது. அடுத்த இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3,484,401 ஓட்டுக்கள் பெற்றது.
 
ஜவகர்லால் நேரு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமராக பதவி ஏற்றார். முதல் தேர்தலில் வாக்குப்பதிவு 45.7 சதவீதமாக இருந்தது. மொத்தம் 489 எம்.பி.க்களுக்கு 401 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 86 தொகுதிகள் இரட்டை எம்.பி. தொகுதிகளாகவும்,  ஒன்று 3 எம்.பி.க்களை கொண்டதாகவும் இருந்தது. (1960 இல் தான் பல அதிக எம்.பி.க்களை கொண்ட தொகுதிகள் மாற்றப்பட்டன.) 2 எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்களாக இருந்தனர்.
இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தல் பற்றி சில தகவல்கள்:
இந்த தேர்தலில் 53 கட்சிகள் மற்றும் 1,874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 489 இடங்களில் 487 தொகுதிகளுக்கு கட்சிகள் போட்டியிட்டன.

2 பேர் நியமன உறுப்பினர்கள். இந்திய மக்கள் தொகையான 36 கோடியில் 17.32 கோடி பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர். இந்த தேர்தலில் 45.7 சதவீதத்தினர் வாக்களித்தனர்.

ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 45 சதவீத வாக்குகளுடன் 364 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 16 தொகுதிகளுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3.29 சதவீத வாக்குகளை பெற்று 2வது இடம் பிடித்தது. தேர்தலில் 10.59 சதவீத வாக்குகளுடன் 12 தொகுதிகளை பெற்று 3வது இடம் பிடித்தது சோசலிஸ்ட் கட்சி.

Comment here