/ கோர்ட் / சுப்ரீம் கோர்ட் சிஸ்டம் சரியில்லை! – ஜட்ஜூகள் கூட்டாக பேட்டி!

சுப்ரீம் கோர்ட் சிஸ்டம் சரியில்லை! – ஜட்ஜூகள் கூட்டாக பேட்டி!

tamilmalar on 12/01/2018 - 2:11 PM in கோர்ட்
5 (100%) 1 vote

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இன்று, ‘உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை’ என்று ஊடகங்கள் முன்பு பரபரப்பு குற்றம்சாட்டினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகிப்பவர்கள் ஊடகத்தினரைச் சந்தித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேரின் பரபரப்பு அறிவிப்பால் இன்று காலை தலைநகர் டெல்லி பரபரப்பானது. ஊடகங்களைச் சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததே அதற்குக் காரணம் ஆகும். ஏனென்றால், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்கள் ஊடகங்களைச் சந்தித்துப் பேசும் மரபு இதுவரை இல்லை.

நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை. நிர்வாகம் சரியில்லை. இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால், எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்துப் பேசினோம். அதன்பிறகு உங்களைச் சந்திக்கிறோம். எங்கள் கவலைகளை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் செய்தியாளர்களிடம் பேசுகிறோம்” என்றார்.

உச்ச நீதிமன்றத்தைப் பாதுகாப்பது குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார். என்னப் பிரச்னை என்று நீதிபதிகள் நேரடியாகக் கூறவில்லை. எனினும் அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருப்பதாக அவர்களின் பேச்சில் தெரிகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்தத் திடீர் பேட்டி இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

0 POST COMMENT
Rate this article
5 (100%) 1 vote

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *