Sliderவரலாறு

சுவாமி விபுலாநந்த அடிகள்

5 (100%) 1 vote

 

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.என்றும் வையத்துள் வழ்வாங்கு வாழ்பவர், வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.என்றும் வாழ்தலுக்கு விளக்கம் கூறி வாழ்ந்தவர்கள் நாம் இவ்வுலகிலே தோன்றியவர்களில் பலர் புகழொடு தோன்றி மறைந்தும் அவர்களின் பெயர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. . இவ்வாறு தமிழுக்கு அரிய வகையில் தொண்டுகள் பல செய்து பெயர் மட்டும் அதிகம் பேருக்குத்தெரிந்த பெரியோர்கள் சிலரின் வரலாற்றை வரிசையாக தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறேன் .தமிழருக்காக ,, ,நமதுதமிழுக்காக உழைத்தவர்களை முழுவதுமறிந்து போற்றுவதைத்தவிர அவர்களது தொண்டிற்கு நம்மால் வேறு என்ன கைம்மாறு செய்ய இயலும் ?
இத்தகைய பலருள் முதலில் சுவாமி விபுலாநந்தர் பற்றிய செய்தியில் இருந்து தொடங்குவோம் அவரின் பெயர் தெரிந்த அளவிற்கு அவரின் தொண்டு பலரும் அறியாதது . முத்தமிழில் , இசைத்தமிழ் தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்ற முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் யாழ் நூல் அரங்கேறி 60 ஆண்டுகள் நிறைகின்றன.

சுவாமி சுவாமிவிபுலாநந்தரின்இயற்பெயர்
மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 27 ஆம் தேதி சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும்தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசைமுதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். சில காலம் ஆசிரியர் தொழில் புரிந்து பின்பு தனது
மனதை ஈர்த்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப்புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார் 1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

செட்டி நாட்டரசர்அண்ணாமலை செட்டியார் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டை செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் ‘பிரபுத்த பாரதம்’ (Prabuddha Bharatha) என்றஇதழின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய ‘யாழ் நூல்’ உருவாக்கம் பெற்றது.
. சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில்திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினா

யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில்இலங்கை திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின்முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது . ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது.

அவர் இயற்றிய நூல்களில் சில
மதங்க சூளாமணி
யாழ்நூல்
சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997)
விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு)
# அண்ணாமலை சுகுமாரன்

 

Comment here