இந்தியா

சூச்சிப்பாரா அருவி

இலையுதிர் மற்றும் பசுமையான காடுகளின் மத்தியில், மூன்றடுக்குகளாக அமைந்திருக்கும் மூன்று நீளமான நீர்வீழ்ச்சி இது. அதன் உண்மையான அழகு, பெருமை, அமைதி அனைத்துமே இயற்கையின் மடியில் பாந்தமாக அது அமைந்துள்ள விதத்தையே சார்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. கேரளாவின் கல்பெட்டா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெப்பாடி நகருக்கு அருகே சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. 300 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவி, காவலாளி பாறை என்று பிரபலமாக அறியப்படுகிறது. சூச்சிப்பாறை அருவியின் மூன்று நீட்சிகளில், இரண்டு மீன்முட்டி அருவியிலும், மற்றொன்று கந்தன்பாறை அருவியிலும் விழுகின்றன. அதன் பிறகு இவை சாளியார் நதியுடன் இணைகின்றன.

அதோடு இந்த மூன்று நீட்சிகளும் சேரும் இடம், ஒரு சிறிய குளத்தை உண்டாக்குகிறது. இந்தக் குளத்தில் பயணிகள் படகுப் பயணம் செல்வதோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளத்து நீரில் நீந்தித் திளைக்கலாம். சூச்சிப்பாறை அருவியை 2 கிலோமீட்டர் நெடுந்தூர நடைப்பயணம் மூலம் பசுமையான தேயிலை தோட்டங்களையும் காடுகளையும் கடந்து அடையும் அனுபவம், உங்கள் நினைவு இடுக்குகளில் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும். மேலும் இங்கு பயணிகளுக்காக மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்களில் இருந்து அருவியின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டத்தையும் பரிபூரணமாகக் கண்டு ரசிக்கலாம்.

Comment here