ஜெ.வுக்கு செப்டம்பர் 22ல் என்னாச்சு?- ஆணையத்தில் சசிகலா வாக்குமூலம்

Rate this post

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் நேரில் பார்த்ததாக ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனுக்கு சசிகலா எழுத்து மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனுக்கு சசிகலா அளித்துள்ள வாக்குமூலத்தில், ” சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதில் இருந்தே ஜெயலலிதா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். அவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப் பட்டது. அதன் பின் வழக்கிலிருந்து விடுதலையான பிறகு தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டது.அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்பதால் தான் ஆர்.கே நகரில் போட்டியிட முடிவு செய்து அங்கு அவர் போட்டியிட்டார். எனினும் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அடிக்கடி சர்க்கரை அளவு அதிகரித்துக்கொண்டிருந்தது. 2016 செப்டம்பரில் அவரது உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டன. சர்க்கரை அளவு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

அவருக்குச் சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே தனியாக சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவர் நியமிக்கப்பட்டார். தோல் சிகிச்சை மருத்துவரும் நியமிக்கப்பட்டனர். குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். செப்டம்பர் 19ஆம் தேதி காய்ச்சல் வந்தது. செப்டம்பர் 21ம் தேதி பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தேதி இரவு 9.30 மணியளவில் போயஸ் கார்ட்ன் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் ஜெயலலிதாவுக்கு திடீரென மயக்கம் ஏற்படவே உதவிக்கு அழைத்தார்.

முன்னதாக, ஜெயலலிதாவை இரண்டு முறை சோதித்த மருத்துவர் சிவக்குமார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறினார். ஆனால் ஜெயலலிதா அதை ஏற்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மயக்கம் ஏற்படவே, அவருக்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவர் கே.எஸ் சிவக்குமாரை அழைத்தோம். அவரும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உடனடியாக வந்தனர். அப்பல்லோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டியின் கணவர் விஜயக்குமார் ரெட்டிக்கு சிவக்குமார் தொலைபேசியில் பேசினார்.

கிரிம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இரண்டு ஆப்புலன்ஸ்கள் உடனடியாக போயஸ் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தன. ஜெயலலிதாவை மயங்கிய நிலையல் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸ்க்குக் கொண்டுவந்தோம். போக்குவரத்து தடையின்றி ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனை செல்வதற்கு உத்தரவு அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேகமாக அப்பல்லோ மருத்துவமனை விரைந்தது.

ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருக்கும்போதே, ஜெயலலிதாவுக்கு மயக்கம் தெளிந்தது. நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்டார். மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் எனக் கூறினேன். 10 -15 நிமிடத்திற்குள் மருத்துவமனையை அடைந்துவிட்டோம். அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அக்டோபர் 22ஆம் தேதி அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார்.அதிமுக தலைவர்கள் ஓபன்னீர்செல்வம், தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் செப்டம்பர் 22 -27ஆம் தேதிகளில் சந்தித்தனர். செப்டம்பர் 27ஆம் தேதி தனது தனி பாதுகாப்பு அதிகாரிகளான பெருமாள்சாமி மற்றும் வீரபெருமாளை சந்தித்தார். அப்போது அவர்களிடம் நான் நலமுடன் இருக்கிறேன், சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நாம் வீட்டிற்குச் சென்று விடலாம் எனக் கூறியுள்ளார். 16 நவம்பர் 19இல் ஜெயலலிதாவை வேறு அறைக்கு மாற்றிய பின்னர் அமைச்சர் நிலோபர் கபிலும் பார்த்தார்” என்று சசிகலா பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

 

முன்னதாக் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 3 மாதங்களாக தங்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தம்பிதுரை எம்.பியும் கூறியுள்ள நிலையில், சசிகலா இரு தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரின் அனுமதியோடு வீடியோக்களை நான் எடுத்தேன். அந்த 4 வீடியோக்களும் விசாரணைக் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் சசிகலா கூறியிருக்கிறார்.

2016- ம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்தே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையிலேயே இருந்தது. செப்டம்பர் 27-ம் தேதி காவிரி நீர் பங்கீட்டு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அப்போதையை தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசுவாமி, அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் தனிச் செயலாளர்கள் ஏ.ராமலிங்கம், கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, அவரிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றனர்” என்று சசிகலா அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*