ஆன்மிகம்ஜோசியம்

ஜோதிடக் கலையை முறைப்படுத்திய வராஹமிகிரர்…

 

வானியலும், கணிதமும் இணைந்த மகத்தான கலை ஜோதிடம். எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் அற்புதமான பாரம்பரிய விஞ்ஞானக் கலை அது. தற்காலத்தில் ஜோதிடம் ஒரு பிழைப்புத் தொழிலாக மாறிய பிறகு அதன் மகத்துவம் குறைந்துள்ளது. ஆனால், உண்மையான ஜோதிடத்தை அரிய விஞ்ஞானமாக நமது முன்னோர் வழங்கிச் சென்றுள்ளனர். அதனை முறைப்படுத்தியவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராஹமிகிரர் (பொ.யு. 505 – 587).

மத்திய பாரதத்தின் அவந்தியில் பிறந்தவர் மிகிரர். அவரது தந்தை ஆதித்யதாசரும் வானியல் மேதையாவார். கபித்தகா என்ற இடத்தில் கல்வி கற்ற மிகிரர், உஜ்ஜையினியில் வாழ்ந்தார்.

இளம் வயதில் மகதப் பேரரசின் குசும்புரா சென்ற மிகிரர் அங்கு ஆரியபட்டரைச் சந்தித்தார். அந்தச் சதிப்பு, மிகிரரின் உள்ளத்தில் வானியலில் சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

மாளவ ராஜ்ஜியத்தில் குப்தப் பேரரசின் இறுதிக்காலத்தில் ஆட்சி புரிந்த யசோதர்ம விக்கிரமாதித்தனின் அரசவை நவரத்தினங்களுள் ஒருவராக மிகிரர் பணிபுரிந்தார்.

மன்னனின் குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த மிகிரர், அவன் 18 வயதிலேயே மாண்டுபோவான் என்று கணித்தார். அதை மன்னன் ஏற்கவில்லை. பலத்த பாதுகாப்புடன் அவன் வளர்க்கப்பட்டான். ஆயினும், அவனது 18-வது வயதில் அசாதாரணமான முறையில் அவன் இறந்தான். அப்போது ஜோதிடத்தின் சிறப்பை உணர்ந்த மன்னன், மிகிரருக்கு குப்தப் பேரரசின் ‘வராஹ’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தான். அதன்பிறகு அவர் வராஹமிகிரர் என்று அழைக்கப்பட்டார் என்று செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

உஜ்ஜையினில் இருந்த கணிதக் கல்வி நிலையத்தின் பொறுப்பாளராக மன்னன் அவரை நியமித்தான். அவரது காலத்தில் கணித ஆராய்ச்சி மையமாக உஜ்ஜையினி உருவெடுத்தது.

கணித மேதை, வானியல் நிபுணர், ஜோதிட வல்லுநர் என பல முகங்களை உடையவர், வராஹமிகிரர். முதலாவது ஆரியபட்டரின் கணித, வானியல் நூல்களை ஆராய்ந்து, அவற்றின் தொடர்ச்சியாக புதிய நூல்களை அவர் படைத்தார்.

அவரது முக்கியமான பங்களிப்பு ‘பஞ்ச சித்தாந்திகா’ நூல் (பொ.யு. 575) ஆகும். ஜோதிடக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதை, ஜோதிட ஆதார நூலான பிருஹத் ஜாதகம் ஆகியவையும் அவரால் எழுதப்பட்டவை. அவரது மகன் பிருத்யூசாஸும் ஜோதிட வல்லுநர். அவர் ‘ஹோரசாரா’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

பஞ்ச சித்தாந்திகா:

இந்நூலில் பாரதத்தின் பழமையான வானியல், கணித நூல்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல நூல்கள் கால வெள்ளத்தில் மறைந்துப்போனாலும், பஞ்ச சித்தாந்திகா வாயிலாக அந்த நூல்களின் செல்வாக்கை அறிய முடிகிறது. இந்நூல், சுருக்கமான தொகுப்பாகவும், கணித, வானியல் ஆய்வேடாகவும் விளங்குகிறது.

சூரிய சித்தாந்தம் (இந்திய முறை), ரோமக சித்தாந்தம் (ரோம முறை), பௌல்ஸிய சித்தாந்தம் (கிரேக்க முறை), வசிஷ்ட சித்தாந்தம் (இந்திய முறை), பைதாமஹ சித்தாந்தம் ஆகிய ஐந்து வானியல் சித்தாந்தங்களையும் விளக்கி, அவற்றை ஒப்பிட்டு, இந்நூலை எழுதி இருக்கிறார் வராஹமிகிரர்.

வேதாங்க ஜோதிஷம், ஹெலெனிய (கிரேக்க) வானியல் ஆகியவற்றையும் இந்த நூலில் மிகிரர் ஒப்பிடுகிறார். உத்தராயண அயனாம்சத்தின் மதிப்பை 50.32 விநாடிகள் என்று துல்லியமாக கணக்கிட்டுள்ளார் அவர். இந்த நூல், அரபி, கிரேக்க, எகிப்திய, லத்தீன் மொழிகளில் பெயர்க்கப்பட்டு பயிலப்பட்டது. நவீன வானியலுக்கு பழமையான வானியலை அறிமுகப்படுத்துவதாகவே பஞ்ச சித்தாந்திகா திகழ்கிறது.

பிருஹத் சம்ஹிதை:

இந்த நூல் ஜோதிட கலைக் களஞ்சியமாகும். 106 அத்தியாயங்கள் கொண்ட மாபெரும் தொகுப்பு நூலான இந்நூல், வானியலையும் உலக இயக்கத்தையும் பிணைக்கும் சக்திகள் குறித்து விவரிக்கிறது.

கோள்களின் இயக்கம், அவற்றின் சக்தி, பூமி மீது அவை செலுத்தும் ஆதிக்கம், மனித வாழ்வில் கிரகங்களின் செல்வாக்கு, திருமணப் பொருத்தம், மழைப்பொழிவு, கிரஹண காலம், பயிரிட ஏற்ற காலம், நவரத்தினங்களில் நவகோள்களின் தாக்கம், ஜோதிடச் சடங்குகள், கட்டடக் கலை, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு உள்ளிட்ட மனித வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்களை அவர் இதில் விளக்கியுள்ளார்.

கருட புராண அடிப்படையில் நவரத்தினங்களை வகைப்படுத்தும் மிகிரர், அவற்றை அணிவதன் பலன்கள், அவற்றை மதிப்பிடுதல் குறித்தும் விளக்குகிறார்.

பிருஹத் ஜாதகா:

ஜோதிடக் கலையின் மூன்று பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் விளங்குகிறது. இந்த நூலே இந்திய ஜோதிடக் கலையின் அடிப்படை நூலாக அமைந்துள்ளது. லகு ஜாதகம், சகுனம், பிருகத் ஜாதகம், பிருகத் யோக யாத்திரை, பிருகத் விவாக பதள், லக்ன வராஹி, குதூகல மஞ்சரி, தெய்வாஞ்சன வல்லபம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இந்நூல், மனிதரின் வாழ்க்கையை முறைப்படுத்த ஜோதிடத்தை சிறந்த கருவியாக முன்வைக்கிறது.

கோள்களின் ஈர்ப்பு சக்தி பிரபஞ்சத்தில் நிகழ்த்தும் மாயங்களை தனது நுண்ணறிவால் உய்த்துணர்ந்து, மேற்கத்திய வானியலையும் பாரத வானியலையும் ஒப்பிட்டு, இந்த நூல்களை வராஹமிகிரர் படைத்துள்ளார்.

“மிலேச்சர்களாக இருந்தபோதும் வானியல் அறிவில் கிரேக்கர்கள் சிற்ந்து விளங்குகின்றனர். அவர்களுக்கு அறிவியல் ஆர்வம் மிகுதி” என்று பிருஹத் சம்ஹிதையில் (2:15) குறிப்பிடுகிறார் மிகிரர். அப்படியெனில் அவர் கிரேக்க மொழி அறிந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அவரது காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து உஜ்ஜையினிக்கு வானியல், கணித மேதைகள் வருகை தந்தனர்.

பிற கண்டுபிடிப்புகள்:

ஆரியபட்டர் உருவாக்கிய திரிகோணவியலில் பயன்படும் ஜ்ய (சைன்) அட்டவணையை மிகிரர் துல்லியமாக மேம்படுத்தினார்; புதிய திரிகோணவியல் விதிகளையும் அவர் உருவாக்கினார்.

பூஜ்ஜியம், எதிர்மறை எண்களின் இயற்கணிதப் பண்புகளை மிகிரர் விளக்கியுள்ளார்.

ஈருறுப்புக் குணகங்களின் (Binomial Coefecients) முக்கோண ஒழுங்கமைவு குறித்து முதன்முதலில் விளக்கியவர் மிகிரரே. அதுவே பின்னாளில் பாஸ்கலின் முக்கோணம் (Pascal’s Triangle) என்று நவீன கணிதத்தில் உருவானது.

துகள்களின் பின்பரவலால் ஒளிப் பிரதிபலிப்பும், ஊடகங்களிடையே ஒளி ஊடுருவும் திறனால் ஒளி விலகலும் ஏற்படுகின்றன என்ற இயற்பியல் கருத்தையும் மிகிரர் முன்வைத்துள்ளார்.

செவ்வாய் கோளில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்று தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அது உண்மையே என்பதை நவீன விஞ்ஞானம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.

புவியின் மேற்பரப்பில் உள்ள தாவரங்களைக் கொண்டே, நிலத்தடி நீரை அறிய முடியும் என்பது அவரது முக்கியமான கருத்தாகும். சூழியல், நீரியல், நிலவியலிலும் பல அவதானிப்புகளை மிகிரர் பதித்துச் சென்றுள்ளார். அவை நவீன விஞ்ஞானிகளால் கவனத்துடன் பரிசீலிக்கப்படுகின்றன.

மனுவின் தர்ம சாஸ்திரம், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், பாணினியின் மொழி இலக்கணம் ஆகியவற்றுக்கு இணையான ஜோதிட சாஸ்திரமாக வராஹமிகிரரின் பிருஹத் ஜாதகம் போற்றப்படுகிறது.

 

-தினமணி  (17.10.2017)

Comment here