கதை

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

அதிகாரம் 4 = நாடி தாரணை
36) மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.

மெய்யெல்லாமாகி = இந்த உடல் முழுவதுமாகி
நரம்போடெலும்பிசைந்து = உடலெங்கும் இருக்கும் நரம்புகள் ,மற்றும் எலும்புகளுடன் இணைந்து
நாடிப் புணர்வு. = நாடிகள் செயல்படுகிறது .
பொய்யில்லை = பொய்யில்லை உண்மையே ,! கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்க வேண்டாம்

நாடிகள் உடம்பெங்கும் வியாபித்து இருக்கும் நரம்புகள் மற்றும் எலும்புகளுடன் இணைந்து செயல் படுகிறது .இதை கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்கவேண்டாம் என்கிறார் . அவர் பொய்யில்லை என்று சொல்லுவது கண்ணுக்குத் தெரியாத நாடிகளை பற்றிமட்டுமில்லை மெய்யெல்லாமாகி என்றுக் கூறி அதிலும் ஒரு நுட்பத்தை தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன் .
மண்ணோடு மண்ணாக மறைந்தொழியும் இந்த மனித உடலைநாம்என்றும்உள்ளதுஎன்று பொருள்படும் மெய் என்ற சொல்லால் அழைக்கின்றோம்.
மனித உடல் அழியக்கூடியதே. ஆயினும், அதனுள் என்றும் உள்ளதான அறிவுப் பொருளாகிய ‘உயிர்’ இணைந்துள்ளது. இந்த உண்மையை சங்ககாலம் தொட்டு வழங்கிவரும் தமிழ்க் கவிதைகள் உயிருக்கு வழங்கியுள்ள ‘மன்’ என்னும் நிலைபேற்றுக்குறிப்பு முன்ஒட்டு. தமிழில் ‘மன்’ என்பதற்கு ‘என்றும் உள்ளது’ என்று பொருள். காட்டாக, சில பாடல்களைக் காண்போம்.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. – என்கிறது திருக்குறள்:244

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல். என்கிறது (மணிமேகலை – 25:228-231)

மெய்யனான இறைவனும், என்றுமுள்ள நிலைப்பேறு பெற்ற உயிரும் உள்ளே உறைவதால், அழியும் தன்மையுள்ள,பொய்யான ஊன் உடம்பை மெய் எனத் தமிழர் காலம் காலமாக அழைத்துவருகின்றனர்

தமிழில் வெற்றுச் சொல் என்பதே கிடையாது., தமிழ் மொழி மெய் அநுபவம் மூலம் உருவாக்கப் பட்டுள்ளதால் எப்படிப்பட்ட இடையூறு இடை இடையே தோன்றி வந்தாலும் இந்த மொழி அசைக்க முடியாத சக்தியாக காலத்தை கடந்து நிலைத்து நிற்கிறது

நம் உடல் அவரவர் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குகளைச் சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே என்றும் அவர்களின் வடிவமைப்பும் ஒன்றே என என்றும் நிறுவுகிறது எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்!
உடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது . எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம் , விளைவாக உயிரையும் வளர்க்கலாம் . உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!!!
— திரு மூலர் —
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே” – –திருமூலர் திருமந்திரம்.
இவ்வாறு மெய் எனும் இந்த உடலுக்குள்உறு பொருள் மறைவாக இருப்பது போல் இந்தஉடலுக்குள் கண்ணுக்குத் தெரியும் நரம்புகளும் எலும்புகளுக்கும் இடையே
நாடிகளும் இயைந்து வினையாற்றுகிறது என்கிறார் எனக் கொள்ளலாம் .
அடுத்து விரைவில் அடுத்ததக குறளைப் பார்க்கலாம் .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here