விளையாட்டு

டி20 தொடர்; நியூசி அணி அறிவிப்பு: வலிமையான இந்திய அணியைச் சமாளிக்க இரு புதிய வீரர்கள் அறிமுகம்

Rate this post

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வலிமையான இந்திய அணியைச் சமாளிக்கும் வகையில் நியூசிலாந்து அணி 2 புதிய வீரர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல், வேகப்பந்துவீச்சாளர் பிளையர் டிக்னர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளை வென்று, ஏற்கெனவே இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிட்டது. இன்னும் 2 போட்டிகள் மட்டும் இருக்கின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷனுக்கு பதிலாக டிக்னரும், வீரர் நீஷம்க்கு பதிலாக பிரேஸ்வெல்லும் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல் என்பவர் புதிதாக அறிமுகமாகிறார்.

நியூசிலாந்தில் நடந்துவரும் சூப்பர் ஸ்மாஷ் கேம்பெய்ன் போட்டியில் மிட்ஷெல் சிறப்பாக விளையாடி 281 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர் டிக்னர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆதலால் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் வில்லியம்ஸன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஜிம்மி நீஷத்துக்கு பதிலாக ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல் அழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து டி20 அணி தேர்வு குறித்து தேர்வுக் குழுதலைவர் கவின் லார்ஸன் கூறுகையில், ” டேர்ல் மிட்ஷெல் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அணி நெருக்கடியான கட்டங்களில் நிதானமாக பேட் செய்யக்கூடியவர், வெற்றிபெற வைக்கும் திறமையான பேட்ஸ்மேன். அதேபோல, டிக்னர் நல்ல வேகப்பந்துவீச்சாளர், துல்லியமாகவும், எதிரணிகளை திணறடிக்கக் கூடியவர் ” எனத் தெரிவித்தார்.

முதல் டி20 போட்டி வெல்லிங்டன் நகரில் பிப்ரவரி 6-ம் தேதியும், 2-வது போட்டி 8-ம் தேதி ஆக்லாந்திலும், 3-வது போட்டி 10-ம் தேதி ஹேமில்டனும் நடக்கிறது.

நியூசிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோமே, லாக்கி பெர்குஷன் (முதல் இரு போட்டிகளுக்கு மட்டும்), மார்டின் கப்தில், ஸ்காட் குக்கலேஜின், டேர்ல் மிட்ஷெல், கோலின் முன்ரோ, மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், பிளையர் டிக்னர் (3-வது போட்டிக்கு மட்டும்)

Comment here