உலகம்

டைட்டானிக்கை தேடி கடலில் இறங்கியவர்கள்

சுமார் 15 ஆண்டுகளில் முதன்முறையாக டைட்டானிக்கை தேடி கடலில் இறங்கியவர்கள், உடைந்த அந்தக் கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாகக் கூறியுள்ளனர்.

சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின்போது, அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.

உடைந்த கப்பலின் பாகங்கள் ஆச்சர்யப்படத் தக்க அளவுக்கு நல்ல நிலையில் உள்ள நிலையில், மற்ற சிறப்பு அமைப்புகள் கடலில் சிதைந்து போயுள்ளன.

அதிகாரிகள் தங்கும் பகுதியில் கப்பல் முகப்பு வலப்புறம் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது.

ஆழ்கடலில் மூழ்கிய போது தாம் பார்த்த சில காட்சிகள் “அதிர்ச்சிகரமானதாக” இருந்தன என்று டைட்டானிக் வரலாற்றாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறியுள்ளார்.

“டைட்டானிக் பற்றி ஆர்வம் காட்டுபவர்களுக்கு பிடித்தமானது அதனுடைய கேப்டனின் குளியல் தொட்டி – இப்போது அதைக் காணவில்லை” என்கிறார் அவர்.

“அந்தப் பக்கம் உள்ள கேபினுக்கு மேலே கடல் மட்டத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் அறைப் பகுதி முழுமையாக சரிந்து வருகிறது, அதனுடன் முக்கிய அறைகளும் அழிகின்றன. இந்த சிதைவு தொடர்ந்து கொண்டிருக்கப் போகிறது’ என்று அவர் தெரிவிக்கிறார்.

“டைட்டானிக் கப்பல் இயற்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

வலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை இந்தக் கப்பலை சிதைத்து வருகின்றன.

ஆழ்கடலில் அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழும் வகையில் உருவாக்கப்பட்ட டிரிட்டான் நீர்மூழ்கியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.படத்தின் காப்புரிமைREEVE JOLLIFFE
Image captionஆழ்கடலில் அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழும் வகையில் உருவாக்கப்பட்ட டிரிட்டான் நீர்மூழ்கியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிக் கிடக்கிறது – கனடாவில் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோ மீட்டர் (370 மைல்கள்) தொலைவில் கடலில் கிடக்கிறது.

அந்தக் காலத்தில் மிகப் பெரியதாக உருவாக்கப்பட்ட, அந்தப் பயணிகள் கப்பல் 1912ல் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கி தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, மிதக்கும் பனிப் பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் 2,200 பேர் மற்றும் கப்பல் பணியாளர்களில், 1,500 க்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்து போனார்கள்.

மரியானா மர்மக் கடலில் அடியில் அதிகபட்ச ஆழம் வரை சமீபத்தில் சென்ற அதே குழுவினர் தான் டைட்டானிக்கை தேடிய பயணத்திலும் ஈடுபட்டனர். பசிபிக் பெருங்கடலில் சுமார் 12 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மரியானா அகழி பகுதியில் அவர்கள் சென்றிருக்கின்றனர்.

இந்த ஆழ்கடல் பயணம் 4.6 மீட்டர் நீளம், 3.7 மீட்டர் உயரம் கொண்ட நீர்மூழ்கியில் – டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் என்ற – நீர்மூழ்கியில் மேற்கொள்ளப் பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டிரிட்டான் நீர்மூழ்கிகள் என்ற நிறுவனம் இதை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

600 மீட்டர் இடைவெளியில் இரண்டு பகுதிகளாகக் கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களைச் சுற்றி வழிநடத்திச் செல்வது சவாலான விஷயம்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மோசமான சூழ்நிலையும், வலுவான கீழ் நீரோட்டமும் இந்த நீர்மூழ்கி பயணத்தை சிரமமானதாக ஆக்குகின்றன. உடைந்த கப்பலுக்குள் குழுவினர் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்தும் அதிகம்.

Comment here