தொழில்நுட்பம்

தண்ணீர், காற்றில் ஓடும் கார்

நீண்ட தொலைவு ஓடக்கூடிய அதாவது பேட்டரி சார்ஜிங் திறன் நிலைத்து நிற்கக் கூடிய வாகனங்களைத் தயாரிக்க நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இவை பெரும்பாலும் லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்துகின்றன. இவற்றின் விலை அதிகமாக உள்ளதால் பேட்டரி கார்களின் விலை வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் சுற்றுச் சூழலைக் காப்பதற்காக பேட்டரி வாகனங்களுக்கு அதிக அளவில் மானிய சலுகை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கான திட்டங்கள் பலவும் தீட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த இரு இளைஞர்கள் தண்ணீர் மற்றும் காற்றில் ஓடக்கூடிய காரை உருவாக்கியுள்ளனர். இந்தக் காருக்கு இவர்கள் சூட்டிய பெயர் ரேஞ்சர் என்பதாகும். கார் ஓடுவதற்கு ஏற்ற திறனை அளிக்கும் பேட்டரியை இவர்கள் அலுமினியம், தண்ணீரில் உருவாக்கியுள்ளனர். இதனால் இவர்களது காரை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் லாக் 9 மெடீரியல்ஸ் என்பதாகும். இது நானோ தொழில்நுட்ப நிறுவனமாகும். இதன் நிறுவனர்களான அக்‌ஷய் சிங்கால் மற்றும் கார்த்திக் ஹஜேலா ஆகியோர் ரூர்க்கி ஐ.ஐ.டி. மாணவர்களாவர். இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.
வழக்கமான லித்தியம் அயன் பேட்டரியானது சேமித்த மின்சாரத்தை வெளியிடும் தன்மை கொண்டது. ஆனால் இவர்கள் உருவாக்கிய பேட்டரியில் கிராபீன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அலுமினியம், தண்ணீர், காற்று இவற்றுடன் வினை புரிந்து மின் சக்தியை அளித்து காரை இயங்கச் செய்கிறது. அதனால் இதை ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.
இந்த அலுமினியமானது 1,000 கி.மீ. தூரத்துக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது.
பொதுவாக பேட்டரியில் இயங்கும் கார்களை ஒவ்வொரு 100 கி.மீ. அல்லது அதிகபட்சம் 150 கி.மீ. தூரத்துக்கு ஒரு முறை ரீ சார்ஜ் செய்ய வேண்டும்.
ஆனால் கிராபீனில் உருவாக்கப்பட்ட பேட்டரி 1,000 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. இதில் கரைந்து போகும் அலுமினியத்தை மட்டும் மாற்றினால் போதுமானது. இது புகை எதுவும் வெளியிடாது. இதனால் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது.
இதில் பயன்படுத்தப்படும் உலோகமும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது. சுழற்சி அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதது.
டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கான தொழில்நுட்பத்தை பெரிய நிறுவனங்கள் வாங்கி செயல்படுத்தினால் மிகக் குறைந்த செலவில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத கார்களை தயாரிக்க முடியும். காற்று, தண்ணீரில் ஓடும் காரை அனைத்து தரப்பினரும் வாங்க முடியும். இதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

Comment here