இல்லறம்

தந்வந்திரி

கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்.

 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது  முதலில் கடலில் இருந்து அமிருத கலசத்தோடு எழுந்தவர் தன்வந்தரி. மகாவிஷ்ணு அவருக்கு அப்சா என  பெயர் சூடினார். 

தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்க விஷ்ணு , ”நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே
தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் ” என்றதாக புராணம் கூறுகிறது.

வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின்  மகனாக புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். தன்வந்திரி இதிகாசங்களில்‌ காணப்படும்‌ அற்புத சித்துக்களையெல்லாம்‌ கடந்து மூன்று லட்சம்‌ கிரந்தங்களையும்‌ கற்றுத் தெளிந்தார்‌. 

அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். தந்வந்திரி ஆயூர்வேத தந்தை என அழைக்கப்படுகிறார்.

இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர்.

இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியன.

தந்வந்திரி ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவரின் குரு நந்தீசர் நட்சத்திரம் விசாகம். இது. தந்வந்திரியின் அனுஜென்ம நட்சத்திரம் ஆகும்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்வந்திரி ஜீவ சமாதிக்கு சென்று வழிபட உடல் நலம் பெற்று, பகைவர்களை வெல்லலாம்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தந்வந்திரியின் ஜீவ சமாதியை வழிபட, நல்வழி பிறக்கும் .

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர அன்பர்கள் தந்வந்திரியின் சமாதியை வழிபட சகல சம்பத்தும் கிடைக்கும் .

ரோகினி, ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரகாரர்கள் தந்வந்திரி / ஜீவ சமாதியை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவரை வழிபட, தோஷம் விலகி சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

குறிப்பு:

  1. அவர்‌ நாகை மாவட்டம்‌ வைத்தீஸ்வரன்‌ கோவில்‌ என்ற திருத்தலத்தில்‌ ஜீவ சமாதி அடைந்தார்.

  2. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது.

நன்றி….

Comment here