Sliderகல்வி

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம்!

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடையில் மாற்றம் செய்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற முழுக்கால் சட்டை, இளஞ்சிவப்பு நிறக் கோடிட்ட மேல் சட்டை அணிய வேண்டும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கருநீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டை அணிய வேண்டும். அதேசமயம் மாணவிகள் கருநீலக் கோடிட்ட மேல் கோட்டு கூடுதலாக அணிய வேண்டும்.

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சீருடை வழங்கப்படும். பிற வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் சீருடை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய சீருடையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Comment here