தமிழகம்

தனியார் மின்சார விற்பனைக்கு கட்டுப்பாடு நீக்கம்

தனியார் மின்சாரத்தை உற்பத்தி செய்து அவற்றை விற்பதற்கு விதிக்கப்பட்டிந்த கட்டுப்பாடு நீக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, வியாழக்கிழமை அவர் ஆற்றிய உரை:

கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலின் போது, இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும் என வாக்குறுதி அளித்தேன். இன்று மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவருக்கும் எந்தவிதத் தடையுமின்றி தரமான மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் மின்சாரம் அளிக்கப்படுகிறது.

மின் கட்டுப்பாடு நீக்கம்: கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் முதல் மிகக் கடுமையான மின் கட்டுப்பாட்டு முறைகளை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது. தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் மின்வெட்டு என்ற நிலை ஏற்பட்டது.

2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு மின் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. வட மாநிலங்களிலுள்ள மின்சாரத்தைப் பெறுவதற்கு மின்வழித் தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்சாரத் திட்டங்கள், பல்வேறு மின்கொள்முதல் ஆகியவற்றின் மூலம் மொத்தம் 8 ஆயிரத்து 432.5 மெகாவாட் மின்சாரத்தை கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாகப் பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

எனவே, தனியாரால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் நீக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின் திறனும், 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளிமின் திறனும் கொண்ட அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Comment here