தமிழகத்தில் காச நோயாளிகளுக்கான திட்டம் ; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Rate this post

உலக காசநோய் தினமான இன்று(மார்ச் 24) தமிழகத்தில் காச நோயாளிகளுக்கான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 

உலக காசநோய் தினத்தையொட்டி எல்லா நாடுகளிலும் இன்று காசநோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னையில் இன்று நடைபெற்ற காசநோய் விழாவில் காச நோய் ஒழிப்பு தொடர்பான களப்பணிக்காக நடமாடும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.1 கோடியில் காசநோயை கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய இந்த வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் காசநோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் இன்று முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, காசநோய் களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினிகளையும் வழங்கிய முதல்வர், நிகழ்ச்சியில் பேசும்போது, “காசநோயை ஒழிக்கத் தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. காசநோய் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடமாடும் வாகனங்களில் மருத்துவர்கள் சென்று காசநோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், காசநோயாளிகளின் சத்துணவுக்காக மாதந்தோறும் 500 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. காச நோயாளிகளுக்கு நோய் குணமாகும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும், காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்கிச் சாப்பிடவும், போக்குவரத்து செலவுக்கும் பயன்படுத்தவும் இந்த உதவித் தொகை பயன்படுத்தி கொள்ளாலாம் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. காசநோயை 2025ஆம் ஆண்டுக்குள் 90% ஒழிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காசநோய் (டிபி) முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தமிழகத்தில் 2025ஆம் ஆண்டிற்குள் காசநோய் ஒழிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*