மாவட்டம்

தமிழக எல்லையை அடைந்தது கிருஷ்ணா நதி நீர்!

Rate this post

ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக, கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது. கண்டலேறு அணையிலிருந்து, கிருஷ்ணா கால்வாயில், ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறந்து விடுகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 300 கன அடி என திறக்கப்பட்ட அந்நீர் படிப்படியாக நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதில், ஆந்திர விவசாயிகளின் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ளநீர், நேற்று மாலை 4.20 மணிக்குதமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயின்ட்’டுக்கு வந்தடைந்தது. இந்த நீர், நாளை(12-ம்தேதி) அதிகாலை, தாமரைகுப்பத்திலிருந்து, 25 கி.மீ., தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு வந்தடையலாம் என, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆந்திர மாநில விவசாயிகளுக்கான நீரின் தேவை படிப்படியாக குறையும்போது, அதிக அளவிலான கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்து, சென்னையின் குடிநீர் தேவையை கணிசமாக பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது என தமிழக பொதுப் பணித் துறையினர் கூறுகின்றனர்.

Comment here