தமிழகம்

தமிழக கடலோரப் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு!-

Rate this post

தமிழக கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகத்திலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் தமிழக கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்திலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.,

வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நேற்று 2-வது நாளாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை கொட்டியது. சென்னை புறநகர் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதுபோல் கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் உள்பட தென் தமிழகத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அருப்புக்கோட்டை, நத்தம், காங்கேயம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சேரன்மா தேவி, பெரியார், விருதுநகர் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும், மேலூர், கடலூர், உடுமலைபேட்டை, பெரிய குமார், பழனி, கோபி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும் பேச்சிப்பாறை, சாத்தூர், திருமங்கலம், காரைக்கால், பாளையங்கோட்டை, வேதாரண்யம், சங்கரன்கோவில், கோத்தகிரி, அரண்மனை புதூர், பெருந்துறை, வானூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 2 செ.மீ., திருவள்ளூர், பூண்டியில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

தென் இந்திய பகுதிகளுக்கு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும். தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய வடகிழக்கு திசை காற்றின் வலு 28-ம் தேதியும் (நேற்று), 29-ம் தேதியும் (இன்று) குறைவாக இருக்கும். அதன்பிறகு, வருகிற 30, 31-ம் (நாளை, நாளை மறுநாள்) தேதிகளில் வடகிழக்கு திசை காற்று வலுப்பெற்று மழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comment here