தமிழகம்

தமிழரின் தொன்மை : நாவலர் நெடுஞ்செழியன்

தமிழரின் தொன்மை : நாவலர் நெடுஞ்செழியன்

தமிழர்கள், முதலில் மலைப்பகுதியான ‘குறிஞ்சி நிலப்’ பகுதியில் வாழ்ந்து இலை- காய் – கனி – கிழங்கு – தண்டு- பட்டை – வேர் போன்ற உணவுகளை உண்டு வாழ்ந்திருக்கின்றனர். பின்னர் நாகரிகம் வளர்ந்த நிலையில் காட்டுப் பகுதியாகிய ‘முல்லை நிலப்’ பகுதியில் குடியேறி, வில் அம்பு கொண்டு, மான் – மாடு – ஆடு பன்றி – முயல் போன்ற விலங்கினங்களையும், காடை – கெளதாரி – புறா போன்ற பறவையினங்களையும் வேட்டையாடி அவற்றின் புலால் உணவுகளை உண்டு வாழ்ந்திருக்கின்றனர்.

பிறகு சமவெளிப் பகுதியான ‘மருத நிலப்’ பகுதிக்குக் குடி பெயர்ந்து, உழவுத் தொழில் செய்யக் கற்றுக் கொண்டு, நெல் – வரகு – திணை – சாமை போன்ற தானியங்களை விளைவித்து அவற்றைச் சமைத்து உண்ணக் கற்றுக் கொண்டு வாழந்திருக்கின்றனர்.

பின்னர் கடற்கரை பகுதியாகிய ‘நெய்தல் நிலப்’ பகுதிக்குச் சென்று, மீன் – நண்டு – ஆமை போன்றவைகளைப் பிடித்து, அவற்றை வாட்டி வதைத்து உண்ணக் கற்றுக் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.

மிகவும் வறண்ட பகுதியாகிய பாலை நிலப் பகுதியில், வில் அம்பொடு வாழ வேண்டிய நிலைக்கு ஆளான முரடர்கள், வழிப் பறிக் கொள்ளைகள் நடத்தி, அவற்றின் மூலம் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர்.

சங்க கால இலக்கியங்கள், குறிஞ்சி – முல்லை- பாலை -மருதம் – நெய்தல் பற்றிய நிலைமைகளையும், பழக்க வழக்கங்களையும், பண்பாட்டு ஒழுக்கங்களையும் விரிவாகவும், விளக்கமாகவும் தெள்ளத் தெளிவாகவும் எடுத்துக் கூறியிருப்பதைக் காணலாம்.

திருக்குறளில், 955 ஆம் செய்யுளில் வரும் ‘பழங்குடி’ என்ற சொல்லுக்கு உரையெழுத முன்வந்த பரிமேலழகர், ‘சேர, சோழ, பாண்டியர் என்றாற் போலப், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் குடி’ என்று குறிப் பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழரின் தொன்மை உணர்த்தப்படுவதை அறியலாம்.

‘தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்த்திடும் சூழ் கலைவாணர்களும், இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!’ என்று பாரதியார் தமிழின் பழைமையையும், தமிழரின் தொன்மையையும் சுட்டிக் காட்டுகின்றார்.

பண்டைத் திராவிட இன மக்கள், வில் அம்பு – வேல் -வாள் – ஈட்டி போன்ற வேட்டையாடும் கருவிகளைக் கண்டுபிடித்தல், ஏர் கலப்பைகளைக் கொண்டு மாடுகளைப் பயன்படுத்தி உழுது, பயிரிட்டு, அறுவடை காணுதல், சமைத்த உணவை உண்ணுதல், மீன் பிடித்தல் பஞ்சினை நூலாக நூற்று ஆடை நெய்து உடுத்தல், வீடு கட்டுதல், கூடை – பாய் – முறம் பின்னுதல், கல் – காய்ந்த சருகு – மரப்பட்டை – பானை ஓடு -கிளிஞ்சல் – பனை ஓலை – இரும்புத்தகடு – செப்புத் தகடு ஆகியவற்றில் எழுத்துக்களை எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற அடிப்படை நாகரிகச் செயல்களில், உலகத்தவர்க்கு முன்னோடிகளாக விளங்கி வந்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துக் கூறியுள்ளனர்.

வாழ்வியல், சமூகவியல், அரசியல், ஆட்சியியல், போரியல், பொருளியல்- உழவியல், உற்பத்தியியல், வாணிகவியல், கப்பலியல் – கடலியல் – மொழியியல் -கலையியல் -கல்வியியல், சமயவியல் போன்றவற்றில், திராவிட நாகரிகம் எவ்வளவு சிறப்புற்றுக் காணப்பட்டது என்பதைச், சங்ககால இலக்கியங்களும், இடைக்கால இலக்கியங்களும் சிறப்பாகச் சுட்டிக்காட்டுவதி லிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

Comment here