Sliderவரலாறு

தமிழர்களின் பண்டைய வலிமையயான வணிகத்தாலேயே

 

கப்பலோட்டிய தமிழனின் தியாகம்

எனது சிறு வயதில் இருந்தே என்னை ஈர்த்தவர் வ உசி
அவரின் தியாகம் மட்டுமல்ல அவரின் செயல் ஊக்கமும் , மாறுபட்ட மனோபாவமும் என்னை ஈர்த்தது .

வெள்ளையனை எதிர்க்க அவர் கையிலெடுத்த ஆயுதம் வித்தியாசமானது .எங்குத்தொட்டால் எதிரிக்கு வலிக்கும் என்று அவர் அறிந்திருந்தார் .மற்றவர்கள் போல் இல்லாமல் தமிழர்களின் பண்டைய வலிமையயான வணிகத்தாலேயே வெள்ளையரை வீழ்த்த நினைத்தார் .
வலுவுள்ளவர்களே சுதந்திரத்திற்கு தகுதியானவர்கள் என்று நம்பினார் .இரண்டாயிரம் ஆண்டு தமிழ் வணிகத்தின் வங்கக்கடலில் கப்பல் ஒட்டிய ஆற்றல் அவரை உந்தியது .நம்பிக்கைத்தந்தது .
அதிலும் என்னை கவர்ந்தது அவர் 1909 இல் மொழி பெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் “As a man Thinketh” என்ற நூல் . ஜேம்ஸ் ஆலனின்அந்த நூல் அனைத்து சுயமுன்னேற்ற நூல்களுக்கும் ஆதாரமானது .அத்தனை உன்னதமான நூல் அதை நானும் சிறு வயதில் 1969 இல் படித்ததுண்டு .எனது வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய சில நூல்களில் இதுவும் ஒன்று .அதை வ.உ.சி. “மனம் போல் வாழ்வு” என்று மொழி பெயர்த்தார்.
மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத்
தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே
மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள்.
எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாவும்
பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின்
ஒழுக்கமாக மாறுகிறது. வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615.இந்த நூல் வ.உ.சி தமிழாக்கம் செய்தது .அதோடுமட்டுமா ?
அகமே புறம்- 1914
ஜேம்ஸ் ஆலனின் “Out from the heart” என்ற நூலை வ.உ.சி. “அகமே புறம்” என்று1914இல் மொழி பெயர்த்தார்.இந்நூல் மனோ நிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி
மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அறச் செயல்களே செய்ய வேண்டும். நமது சொற்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல மன நிலையிலிருந்து சுகமும் தீய மன நிலையிலிருந்து துக்கமும் ஏற்படுகின்றன. நாம் அறிவுடையவர்களாக இருந்தால் தீய செயல்களைச் செய்யமாட்டோம். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 602.

வலிமைக்கு மார்க்கம்- 1916

ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power”என்ற நூலின் முதல் பகுதி “The part of prosperity” ஆகும். அதனை வ.உ.சி. “வலிமைக்கு மார்க்கம்” என்று மொழி பெயர்த்தார். ஒவ்வொரு துன்பமும் ஒரு அனுபவத்தைக் கொடுத்துவிட்டு விரைவில் மறைந்துவிடுகிறது. ஆனால் அது ஒரு நல்ல ஆசிரியர். நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் அது நமக்கு நல்வழிகளைக் கற்பிக்கும். வலிமை என்பது மகிழ்ச்சி போன்று புற அனுபவம் இல்லை. அது ஓர் உள் அனுபவம். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நாமே எதையும் செய்யும் வலிமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஒருவன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடிந்தால் அவனால் மற்றவர்களையும் கட்டுப்படுத்த முடியும். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615; பக்க எண் 652-653.

சாந்திக்கு மார்க்கம்- 1934

ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power”என்ற நூலின் இரண்டாம் பகுதி “The way to peace” ஆகும். அதனை வ.உ.சி. “சாந்திக்கு மார்க்கம்” என்று மொழி பெயர்த்தார். ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்குரிய வழியாகும். தியானமென்பது ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல் ஆகும். அன்பு எல்லாவற்றையும் ஆளக் கூடியது. அடக்கம் கடவுள்
தன்மை ஆகும். எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
பொறுமையானவனாகவும், இனிமையானவனாகவும்,
அன்பானவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ
அவன் தான் மெய்ப்பொருளை உணர்கிறான். சுய நலத்தைத் துறத்தலும் இறை நம்பிக்கையும் கடவுள் தன்மையை அடைவதற்கு உரிய வழிகளாகும். அன்பே நிரந்தரமானது.
வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 715; 740; 760; 766.

இவ்வாறு இத்தனை வாழ்வின் மாறாத உண்மைகளை படித்து உணர்ந்தது மட்டுமின்றி அவைகளை தமிழிலும் மொழி பெயர்த்தார் .இத்தனை சிந்தனைத்தெளிவே அவரை அவர் அனுபவித்த அத்துணை துயரங்களிலும் தாக்குப்பிடித்தது நிலை பெற செய்தது .அவரின் புகழ் போற்றி பாராட்டப்படுவதில்லை என்பது அவரின் குற்றமல்ல .அது தமிழ் சமூகத்தின் இழிவு .
அவரின் அறிவாற்றல் அவரை இத்தனைத்துயத்திலும் இடிந்து போகாமல் நிலை பெறச்செய்தது .
அவருக்கு ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் தொழில் செய்ததற்காக ,தொல் தமிழன் \2000 ஆண்டுகளுக்கு முன் பெற்றிருந்தஆளுமையைமீட்டெடுத்ததற்காக
விதிக்கப்பட்ட தண்டனைத்தெரியுமா ?
அவரின் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. அவர் கண்டா நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.
அத்தகைய சந்தர்ப்பம் அவர் நடத்திய ஒரு பொதுக்கூட்டத்தில் மூலம் கண்டனர்
அப்போது , மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு
என்ற ஊரைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா. அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினார். வ.உ.சி.கடற்கரையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது பேச்சாற்றலும் தாய் நாட்டுப் பற்றும் வ.உ.சி.யை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட
உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது
நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது.
வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள்
கொந்தளித்தனர்.திருநெல்வேலியில் கடைகள்
அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும்கல்லூரிகளும்சேதப்படுத்தப்பட்டன.மண்ணெண்ணெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது.
தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. அப்போதைய கோரல் நூற்பாலை மற்றும் “பெஸ்ட் அண்ட் க்ம்பெனி” தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.
நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி
வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது.
பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக்
கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன.
காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள்.

வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை
ஜாமீனில் வெளிவரும்படிக் கேட்டுக் கொண்டனர். சிவாவும் பத்மநாப ஐயங்காரும் அவருடன் சிறையில் இருந்தனர். அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டுத் தனியாக வெளி வர விரும்பவில்லை. இந்நிகழ்ச்சியில் இருந்து அவரது தைரியத்தையும் நேர்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தனர்.

 1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள்
  நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)
 2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம்
  கொடுத்தார்.(பிரிவு 153-அ)
  வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில்
  பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள்
  உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம்
பின்வரமாறு:

 1. ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில்
  ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு
  தீவாந்திரத் தண்டனை.
  சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
 2. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை!அதுவரை யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும்.என்று தீவிரமாக நினைத்தனர்
வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.
இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வங்காளி, “அமிர்த பஜார்”, சுதேசமித்திரன்” “இந்தியா”, “ஸ்வராஜ்யா” மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தன. ஆங்கில இதழான “ஸ்டேட்ஸ் மேன்” இத்தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது.

ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய
தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. லார்டு மார்லி,
இந்தியாவுக்கான ஆங்கில அமைச்சர், இக்குரூரமான
தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது என லார்டு
மன்றோவுக்கு எழுதினார். அந்தத் தீர்ப்பினை எதிர்த்து
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத்
தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தண்டனைக்காக அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் .
அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர்
அவையில்(பிரிவியூ கௌன்சிலில்) முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது.
,வ.உ.சி. முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர்
கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இப்பொழுதெல்லாம் அரசியல் கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர்.சிறையில் வசதியுடன் வாழ்கின்றனர் ஆனால் அக்காலத்தில் அவர்கள் மற்ற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட்டனர். அரசியல் கைதிகளுக்கு தண்டனை கடுமையானது
கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். வ.உ.சி.
செல்வந்தர். நல்ல ஆரோக்கியமான சுவையான உணவு
உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. சிறை ஆடைகள் முரடானவை. தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டிருப்பர்.
சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார்.
சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில்
இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது.
மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார்.
உடனே அரிசி

உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.

வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
வ.உ.சி. கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை

கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு
அடிக்கப்பட்டார்கள். வ.உ.சி.யை அச்சுறுத்த சிறை அதிகாரி ஒரு கொடூரமான சிறைக்கைதியை வ.உ.சி.யின் அறைக்கு வெளியே தூங்கும்படி செய்தார். வழக்கமாக அவன்தான் எல்லோரையும் அடிப்பான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவன் வ.உ.சி.யின் சீடனாகிவிட்டான்

வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம்
மூழ்கிப் போனது. அவரில்லாமல் ஆங்கிலேயரின் அளவு கடந்த அச்சுறுத்தலால் மற்றவர்களால்
நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை
விற்றுவிட்டனர். அதுவும் “எஸ்.எஸ்.காலியோ” என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.எத்தனை பாடுபட்டார்?

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை
அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ் நிலை முற்றிலும்
மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அரசியலில் இருந்து ஒதுங்கினார் .

வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் (1913–1936)சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார்.
வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார்.

அவர் ஒரு மண்ணெண்ணைக் கடை ஆரம்பித்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லைவ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார்.
அவர் செய்த நூல்களைப்பற்றியும் , அவர் மற்ற ஊர்களில் வாழ்ந்த நிகஸ்ஸ்ஹ்வுகளையும் இன்னமும் சில செய்திகளை அடுத்தும் பார்க்கலாம் .
தொடரும்
#அண்ணாமலைசுகுமாரன்
27/3/19
படங்கள் வ.உ.சி
— ஒட்டிய சுதேசி கப்பல்

Comment here