Sliderஇயல்தமிழ்

தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா மறைவு!

மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா தனது 84-ம் வயதில் இன்று இயற்கை எய்தினார். 50-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராகவும், இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்து வந்த இவரின் மறைவு தமிழ் வாசகர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் ம.இலெனின் தங்கப்பா. தனது தந்தையின் மூலம் இவருக்கு பல்வேறு தமிழ் நூல்கள் இளமையிலேயே அறிமுகமாயின. இளங்கலைப் பொருளியல் பயின்ற தங்கப்பா, பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார். பின்பு பள்ளி ஆசிரியராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு பல பணிகள் செய்த தங்கப்பா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்து தொடக்க காலத் இதழியல் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்பு பாவேந்தர் பாரதிதாசன் குயில் இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர். பின்பு பல இதழ்களுக்கு எழுதத் தொடங்கினார். அவற்றுள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்கள் குறிப்பிடத்தகுந்தன.

பாடல் புனையும் திறன் அவருக்கு இளமை காலம் முதலே இருந்து வந்தது. இளமை காலம் தொடங்கி இன்றுவரை கற்பனை வளம் குறையாமல் படைப்புகளை வழங்கி வந்தார். தமிழின் செவ்வியல் படைப்புகளை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் பெயர்த்தவர். ‘Hues and Hormonies’ என்னும் பெயரில் சங்கப் பாடல்களையும் ‘Songs of Grace in St.Ramalingam’ என்னும் பெயரில் இராமலிங்க அடிகளாரின் பாடல்களையும் மொழி பெயர்த்த பெருமைக்கு உரியவர். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மொழி பெயர்த்து ‘Selected Poems of Bharathidasan’ எனவும் வெளியிட்டவர்.

தங்கப்பாவின் படைப்புகள் பல விருதுகளை பெற்றுள்ளன. இவற்றுள் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது(1991), பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியார் விருது(1998), தமிழர் தேசிய இயக்கத்தின் தமிழ்த்தேசியச் செம்மல்(2002) விருது உள்ளிட்டன குறிப்பிடத்தகுந்தன. இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர். பல்வேறு தமிழமைப்புகளின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவர். தெளிதமிழ் இதழின் ஆசிரியராகத் தமிழ்த்தொண்டு செய்தவர்.

தமிழுக்கு பெருந்தொண்டு செய்த தங்கப்பாவின் மறைவு தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பாகும். சிறுவயது முதல் இறக்கும் வரை அவர் ஆற்றிய தமிழ்ப்பணி அவரை எப்போது நினைவில் வைத்திருக்கும்.

Comment here