‘தமிழாற்றுப் படை’ வரிசையில் செயங்கொண்டார் குறித்த கட்டுரையை நாளை அரங்கேற்றுகிறார் வைரமுத்து!

Rate this post

கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப் படை’ வரிசையில் செயங்கொண்டார் குறித்த கட்டுரையை நாளை (ஜூலை 12) மாலை சென்னை காமராஜர் அரங்கில் அரங்கேற்றுகிறார்.

இதுதொடர்பாக வைரமுத்துவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், ஆண்டாள் என 17 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 18-வது படைப்பாக கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி அரங்கேற்றும் விழா நாளை (ஜூலை 12) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். மரபின் மைந்தன் முத்தையா, விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து அரங்கேற்றும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஜூலை 13-ல் பிரசுரமாகும்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் சிறந்த கவிஞர் ஒருவருக்கு ‘கவிஞர்கள் திருநாள்’ விருதை வைரமுத்து வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான விருது கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் ரொக்கம், ஒரு பட்டயம் கொண்ட விருதை சென்னை டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் வரும் 13-ல் நடக்கும் விழாவில் வைரமுத்து தருகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*