வரலாறு

தமிழ்நாட்டில் ஃபாசில்கள்

புதுச்சேரி – கடலூர் – விருத்தாசலம் பகுதி

புதுச்சேரிக்கு வடமேற்கே, சேதாரப்பட்டுப் பகுதியில் கடல் ஃபாசில்கள் தாங்கிய சுண்ணாம்புக் கல் படிவங்கள் உள்ளதெனப் பார்த்தோம். தென் திசையில் இந்தப் படிவங்களின் தொடர்ச்சி சங்கராபரணி ஆறு, அரியாங்குப்பம் ஆறு, தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு ஆகிய ஆறுகளின் அண்மைக்கால வண்டல்களின் கீழ் மறைந்துவிடுகிறது.

கெடிலம் ஆற்றின் தெற்குக் கரையில் திருவந்திபுரத்தில் (கடலூருக்கு அருகே உள்ள இந்த ஊர், வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று) ஹயக்ரீவர் கோயில் அமைந்துள்ள குன்றில் கடலுர்மணல்பாறைகள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் இங்கே கல்மரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை. எனினும், இங்கிருந்து ஒரு சில கி.மீ. தூரத்திலுள்ள வண்டிப்பாளையம் கிராமத்தில் கடந்த நூற்றாண்டில் முத்தாலு நாயுடு என்பார் கிணறு வெட்டியபோது கல்லாக மாறிய மரத்தைக் கண்டதாக, தன் கெடில வளம் எனும் நூலில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2௦௦1 – பக்கம் 95) அறிஞர் சுந்தர சண்முகனார் குறிப்பிடுகிறார் . இதைத் தவிர, நெய்வேலிக்கு அண்மையிலுள்ள காட்டுக்கூடலூர், கீழக்குப்பம், நெய்வேலி நகரியத்தின் புறத்தே உள்ள பகுதிகள் இங்கெல்லாம் கடலூர் மணல் பாறைகளில் கல்மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுவை மாநிலம் சேதாரப்பட்டிற்குத் தெற்கே வண்டல்களின் கீழ் மறைந்த கிரிடேஷியஸ் படிவப்பாறைகள் சுமார் 50 கி.மீ. இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் விருத்தாசலம் அருகே பாரூர், பட்டி ஆகிய பகுதிகளில் வெளிப்படுகின்றன. (பார்க்க: புவியியல் வரைபடம்).
இங்கேயுள்ள கிரிடேஷியஸ் சுண்ணாம்புப் பாறைகளில் புதுவைப் படிவப்பாறைகளிலும், அரியலூர் படிவப்பாறைகளிலும் கிடைப்பது போல் கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றன.

விருத்தாசலம் படிவப்பாறைகளின் தென்புறத் தொடர்ச்சி, மணிமுத்தாறு மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளால் அண்மைக்காலத்தில் சேர்க்கப்பட்ட வண்டல்களின் கீழ் மறைந்துவிடுகிறது.

கோண்டுவானா காலத்தில், இந்திய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதி அண் டார்டிக்காவிலிருந்து பிரிந்த போது ஏற்பட்ட இழுவிசையின் (TENSION) காரணமாக, இன்றைய காவிரிக்கும் பாலாற்றிற்கும் இடையே வடகிழக்கு – தென்மேற்கு திசையில் பிறழ்வுகள் ஏற்பட்டு, அதன் விளைவாக பெரும் பிளவுப் பள்ளங்கள் உருவாகியிருக்கவேண்டும். இவற்றில் உருவானப் படிவப்பாறைகள் சில நூறு கி.மீ. நீளத்திற்கும் பலநூறு மீ. அகலத்திற்கும் இன்று காணக் கிடைக்கின்றன. இடையிடையே ஆற்று வண்டல்கள் இவற்றை மூடி விடுவதால் புதுச்சேரி படிவப்பாறைகள். விருத்தாசலம் படிவப்பாறைகள், அரியலூர் படிவப்பாறைகள் எனப் பிரித்து அறியப்படுகின்றன.

இவை அனைத்திலுமே கடல்வாழ் தொல்லுயிர் எச்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்த்சக்கது.

அடுத்தப் பதிவில் அரியலூர் போவோம்

Comment here