தமிழகம்

தமிழ் கட்டிடக்கலை- கருவறையில் 16 பட்டை சிவலிங்கம் :

Rate this post

இந்தஎழில் மிகு கோயிலை நிறுவிய இராஜசிம்மன்! போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை கொண்டவன். அதனைச் சுட்டிக்காட்டும்படி,கோயிலில் எங்கு பார்த்தாலும் சிம்மங்களே கோயிலைத் தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலிலே நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் ஒரு கதையைக் கூறுவதாக உள்ளது.
தொன்மனம்கள் சிவனின் புராணங்கள் அத்துனையளவிற்கு அப்போது மக்களிடம் அவை பரவி இருந்ததை உணரமுடிகிறது .
வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்று.முழுவதும் சிவபெருமானின் தோற்றங்களை, அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன,
இங்குள்ள சிற்பங்கள். ஒருபுறம் சம்கார மூர்த்தங்களாகவும் மறுபுறம் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளதும், இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையையும், ஆன்மிக அறிவாற்றலையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.எத்தனை முறை கண்டாலும் அலுக்காத கோயில்களில் இதுவும் ஒன்று .
கருவறையில் 16 பட்டை சிவலிங்கம் : மூலவர் லிங்கத்திற்குப் பின்புறச் சுவரில், எம்பிரான், ஏலவார் குழலியோடும், பாலன் குமாரனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார்.
. நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட லிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி. கருவறையையும் முகமண்டபத்தையும் சுற்றியுள்ள திருச்சுற்றிலும், வெளிச் சுவர்களிலும், பிட்சாடனர், கங்காதரர், திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், துர்க்கை, திருமால் போன்ற சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவதாண்டவ காட்சிகளையும் காணமுடிகிறது.

இத்திருக்கோவில் 1. வெளிப்பிரகாரம் 2. உள்பிரகாரம் 3. மூலவர் கட்டடப்பகுதி என அமையப் பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலின் முதல் நுழைவு வாயில் கிழக்குப் பார்த்த வண்ணமும் மூலவர் அறைக்குச் செல்லும் வாயில் தெற்கு நோக்கியும், மூலவர் கைலாசநாதர், பெரிய 16 பட்டை லிங்கத்திருமேனி கொண்டு, வேண்டி வரும் பக்தகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார்.

காடவர் கோமான் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன்இராசசிம்மன் , எழிலுற அமைத்த கயிலைநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்திட முடிவு செய்தான். அத்தனை ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. குடமுழுக்கான நாளும் குறித்தாகிவிட்டது. மன்னனின் கனவில் மகேசன் தோன்றினார் . அரசன் குறித்த அதே நாளில் அடியார் ஒருவர் அமைத்த திருக்கோயிலுக்கு தான் எழுந்தருள வேண்டியிருப்பதால், கயிலாச நாதர் கோயில் குடமுழுக்கை வேறு நாளில் நடத்திடுமாறு கூறினார். அரசன்இறைவன் கூறிய திருநின்றவூர் சென்றான். ஆரவாரம் ஏதுமன்றி அமைதியாக இருந்தது பூசலாரின் ஊர்அது . ஊர்மக்கள், இங்கு ஒன்றும் கோயில் எழுப்பப்பட வில்லையே என்றனர். பூசலார் என்பவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஈசனின் திருநாமத்தை ஜபித்திருப்பதை மட்டுமே கண்டான் மன்னன். பூசலாரை நெருங்கி, மகேசன் குறிப்பிட்ட கோயில் பற்றி வினவிட, அந்த அடியார், தனது மனத்துக்குள்ளேயே அழகியதோர் கோயில் அமைத்து, அன்றைய நாள் குடமுழுக்கு செய்வதாகவும் கற்பனையில் மூழ்கியிருந்ததைக் கண்டு அதிசயித்தான். பேரரசன் நிச்சயித்த நாளில், மனக்கோயில் கட்டிய பூசலாரை வாழ்த்திட மகேசுவரன் முடிவு செய்ததன் பொருள் விளங்கியது. பூசலார் வசித்த திருத்தலத்திலும் ஓர் அழகிய திருநின்றவூர் திருக்கோயிலை நிர்மாணித்து, அதற்கு குடமுழுக்கை நிறைவேற்றிய பிறகே, காஞ்சி கைலாசநாதர் கோயில் குடமுழுக்கை முறையே நடத்தினான் பேரரசன்

அத்திருக்கோயிலில் இறைவன் எழுந்து அருள்புரியும் கருவறையைச் சுற்றிலும் உள்ள வழி பிறப்பு முதல் இறப்பு வரை என்பதைக்குறிக்கும் கோவிலின் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தை சுற்றிவரும் செயலாகும். அந்த வகையில் அந்த கோயிலின் மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவிலில் பிரகாரத்தை சுற்றும் வழிக்கு சிறிய சதுர துவாரம் மட்டுமே விடப்பட்டுள்ளது. அது போல் பிரகாரத்தை விட்டு வெளிவரவும் சிறு சதுர துவாரம் மட்டுமே உள்ளது. இது அன்னையின் கருவறையில் இருந்து குழந்தை வருவது போன்ற செயலைக் குறிப்பதாகும். மேலும் வெளி வரும் துவாரம் மிகச்சிறியதாக இருப்பதால், வெளியே வர அதற்கு மேலே படிக்கட்டுடன் கூடிய பெரிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாசலின் வழியே சென்று வெளியே வந்தால் மறுபிறப்பு எடுத்ததற்கு சமம்.புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை ஒக்கும் என்கின்றனர் அர்ச்சகர்கள் .இது ஒரு சிறப்பு அமைப்பு
இந்தக்கோவிலில் .
தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது

முதன்மை ஆலயத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள துணை ஆலயங்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. பண்டைய பல்லவர் ஓவியங்களை அறிஞர் தூப்ராய் என்பவர் கி.பி.1931 இல் கண்டுபிடித்தார்.
ஆனால் நாம் அவைகளை மார்தந்துவிட்டோம் .

இன்னமும் சொல்ல எத்தனையோ உண்டு இந்த ஆலயத்தில் .
அலுக்காத அத்தனை அற்புத கலை அழகு கொண்ட தமிழ் நாட்டின் எல்லோரா இது ஒவ்வொரு சிற்பமும் கதை சொல்லும் !

#அண்ணாமலைசுகுமாரன் .

Comment here