மாவட்டம்

தமிழ் வளர்ச்சித் துறை – செய்திக்குறிப்பு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

Rate this post

தமிழின் பெருமைகளை வருங்கால சந்ததியினருக்குத் தெரிவித்து அவர்களின் தமிழ் கற்கும் ஆர்வத்தினை தூண்டுதல் வேண்டும். தமிழ்மொழி காலந்தோறும் பல்வேறு மாற்றங்களை ஏற்று, வளர்ச்சி பெற்று வருவதால் இளமையுடன் திகழ்கிறது.  உலகளாவிய தளத்தில் தமிழுக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, கணினித் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும் தொழில்நுட்பங்களை அரசு அலுவலர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.  கணினித்தமிழ், அறிவியல் தமிழ், பொறியியல் தமிழ் எனப் பல்வேறு கோணங்களில் தமிழ்ச்சுவையை அறிந்து கொள்ளாதது நம்முடைய தவறுதானே அன்றி, மொழியின் தவறு அன்று.  ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்திடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.  அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்று, நடைமுறையில் தூய தமிழில் பேச வேண்டும்.

இவ்வாறு அகரமுதலித் திட்ட மேனாள் இயக்குநர் முனைவர் கோ. செழியன் அவர்கள் 08.02.2019 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமொழிக் கருத்தரங்கத்தில் தலைமையேற்று, ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய விருத்தாசலம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்குக் கேடயமும், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய பணியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கிப் பேருரையாற்றினார்.

கடலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா. அன்பரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) திரு. ஏ. வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் திருமதி ஜெ. ஜான்சிராணி, இந்து தமிழ் திசை புதுச்சேரி பதிப்புச் செய்தியாளர் திரு. ந. முருகவேல், கடலூர் அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.  நாகப்பட்டினம் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியாளர் திரு. கி. சுப்புராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.  கடலூர் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர், திருவள்ளூர் / காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் திருமதி சீ. சந்தானலட்சுமி  திருமதி க. பவானி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கத்தினை சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத் துணை இயக்குநர் (நிருவாகம்) திரு. ம.சி. தியாகராசன் அவர்கள் தொடங்கி வைத்து பயிற்சியளித்தார்.   கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பல்வேறு பொருண்மைகளில் பயிற்சி அளித்தனர்.

Comment here