Sliderபொது

தாய்மொழி தினம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

உலகில் மொழிகள் அழிந்து வருவதைத் தடுக்கவும், தாய்மொழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘உலக தாய்மொழி தினம்’ கடைப்பிடிக்க ஐக்கியநாடுகள் சபை 1999ம் ஆண்டு முடிவு செய்தது. அதற்கான நாளைத் தேர்வு செய்ய விவாதங்கள் நடந்தன. வங்காளதேசம் தாய்மொழிப்போரில் தங்கள் மாணவர்கள், மக்களின் தியாகத்தை எடுத்துச் சொல்லி பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவிக்க வலியுறுத்தியது. அதனை ஏற்ற ஐநா சபை ‘தாய்மொழியைக் காக்க போராடியதால் வங்காளிகள் கொல்லப்பட்ட பிப்ரவரி21ம் தேதி உலக தாய்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும்’ என்று அறிவித்தது. அதன்பிறகு 2000ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி21ம் தேதி உலக தாய் மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி தாய்மொழி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மொழி என்பது நமது அடையாளமும் பண்பாடும் ஆகும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்  ,”தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, அமுதம் போன்ற இனிமையும், இலக்கியச் செழுமையும், வலுவான இலக்கணக் கட்டமைப்பும் தன்னகத்தே கொண்டு,தென்னக மொழிகளின் தாயாகவும், உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த முதன்மொழியாகவும் விளங்கிடும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன்  “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”” என்ற மகாகவி பாரதியாரின் விருப்பத்திற்கேற்ப, சீன – அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்ப்புச் செய்தும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்கியும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும். இந்த உலகத் தாய்மொழி நாளில், தமிழர் பண்பாட்டையும், அடையாளத்தையும் காத்து வளர்த்திட, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றி வளர்த்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Comment here