Sliderஅரசியல்

தினகரன் ஒரு துரோகி. ! முதல்வர் எடப்பாடி காட்டம்!

Rate this post

அம்மாவின் கழக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களின் எண்ணம் தூள்தூளாகி விட்டது. தினகரனைப் போல் எத்தனை பேர் திரண்டு வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று மதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
மாபெரும் சைக்கிள் பேரணி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று மாலையில் மாநில ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சில நாட்களாக அவர் சைக்கிள் பேரணிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிகளை ஆய்வு செய்தார். பின்னர் இந்த நிகழ்ச்சி நேற்று திட்டமிட்டபடி நடைபெற்றது. சைக்கிள் பேரணி துவக்க விழா மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக இந்த விழாவில் அவர் பேசியதாவது,

மாநில அம்மா பேரவை சார்பில் நடைபெறும் இந்த சைக்கிள் பேரணி வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் ஒரு பிரச்சார நிகழ்ச்சியாகவே அமைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கான முன்னோடி பிரச்சாரமாகவே இதை நான் கருதுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் ஒரு நிகழ்ச்சியாகவே இது அமையும். நம்மைப் பொறுத்தவரை நாம் பிரச்சாரத்தை துவக்கி விட்டோம். மதுரையில் எதைத் தொடங்கினாலும் அது வெற்றி பெறும். கடந்த ஓராண்டு காலமாக அம்மா விட்டுச் சென்ற பணிகளை நாம் நிறைவேற்றி வருகிறோம்.

அசைக்க முடியாது

அப்படிப்பட்ட இந்த அம்மாவின் அரசை சிலர் கவிழ்க்க நினைத்தார்கள். கட்சியையும் கலைக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர்களது எண்ணம் தூள் தூளாகி விட்டது. நமது கட்சி ஒரு பெரிய இயக்கம். தொண்டர்களின் முழு ஒத்துழைப்போடு நமது கட்சி வலிமையாக உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் நம்மை யாரும் அசைக்க முடியாது. ஆனால் சிலர் இந்த அரசை கவிழ்த்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். டி.டி.வி. தினகரன் இந்த கட்சிக்காக எந்த தியாகம் செய்தார். தினகரனுக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம். நான் 42 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். இங்கே இருப்பவர்களும் அப்படித்தான். ஆனால் கட்சிக்காக நீ(தினகரன்) என்ன பாடுபட்டாய்? கட்சிக்காக சிறை சென்றாயா? இந்த ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் உனது கனவு ஒருநாளும் பலிக்காது.

தினகரன் ஒரு துரோகி

தினகரனைப் போல் எத்தனை பேர் திரண்டு வந்தாலும் இந்த ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது. கொல்லைப்புற வழியாக வந்தவர் டி.டி.வி. தினகரன். தி.மு.க. வை ஒரு தீய சக்தி என்று சொன்னவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது கனவை நனவாக்கி தன்னையே அர்ப்பணித்தவர் அம்மா. அவரது வழியில் செயல்படும் இந்த அரசை கவிழ்க்க நினைப்பவர்களை தொண்டர்கள் மன்னிப்பார்களா? மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் தினகரன் ஒரு துரோகி. அவரை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்.

42 ஆண்டு காலம் நிலவிய காவிரி பிரச்சினைக்கு இந்த ஆட்சியில் தீர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். கடந்த மாதம் கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டோம். ஆனால் தர மறுத்தார்கள். ஆனால் இப்போது நிலைமை என்ன. அவர்களாலேயே அங்குள்ள அணைகளில் நீரை தேக்கி வைக்க முடியவில்லை. நாம் கேட்காமலேயே இப்போது நமக்கு தண்ணீர் கிடைக்கிறது. தமிழக அணைகள் எல்லாம் மழையால் நிரம்பி வருகின்றன. மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும். இதுவே நமது வெற்றிக்கு அறிகுறி. அனைத்து அணைகளும் இயற்கையாகவே நிரம்புகின்றன. இதுவே நமது வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே இந்த சைக்கிள் பேரணி வெற்றிக்கான ஒரு முன்னோடி பேரணி. இந்த பேரணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நமது ஒருங்கிணைப்பாளர் (ஓ.பி.எஸ்.) சொன்னதைப் போல பேரணியில் செல்பவர்கள் மிகுந்த கவனத்தோடு செல்ல வேண்டும். உங்கள் பிரச்சாரம் எதிர்காலத்தில் நமது வெற்றிக்கு வழிவகுக்கும். நாளை நமதே. நாற்பதும் நமதே. இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகளை பட்டியலிட்டார். முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது போன்ற பல்வேறு சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டு பேசினார். பின்னர் விழா முடிந்ததும் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

Comment here