பொது

தினம் ஒரு தகவல் : பூச்சிக்கொல்லியின் விளைவுகள்

Rate this post
இது டி.டி.டி எனப்படும் டைகுளோரோ டைபினைல் டிரைகுளோரோ ஈதேன் எனப்படும் கொல்லி ஆகும். இது உலகின் பல நாடுகளில் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏன், நமது நாட்டிலும் அறைகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் விற்கப்படுகிறது.
டி.டி.டி. 1880களில் கண்டறியப்பட்டாலும், 1940களில் தான் சந்தைக்கு வந்தது. அதன் கடும் விளைவுகளை 1960களிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ரேச்சல் கார்சன். அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றம், உலகம் முழுவதும் அதற்கு எழுந்த எதிர்ப்பு ஆகியவற்றால் பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டது. ரேச்சல் கார்சன் வாழ்ந்த அமெரிக்க நாட்டிலும் முற்றிலும் தடை செய்யப்பட்டது.
நார்வே, சுவீடன், ஹங்கேரி என்று பல ஐரோப்பிய நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டது. பூச்சிகளைக் கொல்வதற்கு, அதாவது கொசுக்களை முதன்மையாக கொல்வதற்கு இன்றைக்கு இது பயன்படுத்தப்பட்டாலும், இது ஒரு வகை ஊடுருவி பாயும் நஞ்சு. இந்த நஞ்சு நமது சூழலில் தொடர்ச்சியாக தங்கி இருக்கும். கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை இருக்கும். நீர் வழியாக, காற்று வழியாக பல இடங்களுக்கும் இது பரவிக்கொண்டே இருக்கும். இதை பயன்படுத்தும்போது கையுறைகள், முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், நடைமுறையில் இவை எதுவுமே பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் சோகம்.
எடுத்துக்காட்டாக, இந்த வேதிப்பொருள் கொசுவை ஒழிப்பதற்காக புல்வெளிகளில் தெளிக்கப்படுவதாக கொள்வோம். இது உடனடியாக தனது வீரியத்தை இழப்பதில்லை என்பதால், மெல்லக் கரைந்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்லும். அங்குள்ள தாவர மிதவை உயிர்களான பாசிகளில் சேரும்போது, அவற்றில் பத்து மடங்கு கூடுதலாகச் சேரும்.
மீண்டும் அவை மீன்களால் உண்ணப்படும்போது, மேலும் பத்து மடங்கு உயரும். அதன் பின்னர் அவை பறவைகளால் உண்ணப்படும்போதும், பிற பாலூட்டிகளால் உண்ணப்படும்போதும் பத்து பத்து மடங்காக உயர்ந்துகொண்டே போகும். இதற்கு உயிரிய ஊத்தம் என்று பெயர்.
சரி, இந்த டி.டி.டி. என்ன மாதிரியான தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது? மார்பகப் புற்றுநோய், அவற்றுடன் கூடிய புற்றுக் கட்டிகளை உருவாக்குவதில் இது முதன்மை பங்கு வகிக்கிறது. ஆண் மலட்டுத் தன்மைக்கு காரணமாக அமைகிறது. குறைவான எடையுடன் கூடிய குழந்தைப் பேறு, ஈரல் சிதைவு என்று மிக நுட்பமான, சீர் செய்யக் கடினமான நோய்களை உருவாக்குவதில் முதன்மை பெறுகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தை தொடுகிறோமோ, இல்லையோ டி.டி.டி. பூச்சிக் கொல்லி தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் இந்தியாவுக்குத்தான். ஆண்டுக்கு ஏறத்தாழ 3,000 டன்களுக்கு மேல் உற்பத்தி ஆகிறது. இவை மலேரியா ஒழிப்பு என்ற பெயரில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் தலையில் கொட்டப்படுகின்றன. இதன் விளைவாகப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாத கொடூர நோய்கள் பெருகுகின்றன.

Comment here