அரசியல்

திமுக தலைவராகப் போகும் மு.க. ஸ்டாலின் முதல் மூவ் என்ன தெரியுமா?!

Rate this post

திமுக வின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் முக ஸ்டாலின் கட்சி தலைவராகிறார். அத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். மூச்சு விடுவதை எளிதாக்க டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே மேற்கொண்டார்.

சுமார் 19 மாதங்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த ஜூலை 27-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைவையடுத்து திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘’மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டமும், படத் திறப்பு விழாவும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விரைவில் நடக்க உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்’’ என்றார்.

ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அழகிரிக்கும் திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பி விட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

Comment here