கதை

தியானம் என்பது ஆன்மீக வாழ்வில் மிக உயர்ந்த நிலை

 

ராமகிருஷ்ணா மடத்தின் பதிப்பான தியானம் என்ற புத்தகமும் ஒன்று .அதுநான் மதிக்கும் உயரிய புத்தகங்களில் ஒன்று ஆகும் .பலமுறை படித்திருக்கிறேன் .ஆனால் முழுமையாக முடித்ததில்லை .ஏனெனில் இடையிலேயே அத்தனை ஈர்ப்பு கொண்டு செயலில் இறங்க தூண்டும் புத்தகம் அது .அதில் எனக்குப்புரிந்த சில செய்திகளை உங்களுடன் பகிர நினைக்கிறேன் .
2009 இல் எனக்குப்புரிந்தது இதுவே என்ற பெயரில் ஒரு தொடர் சுமார் 30 கட்டுரை க்கு மேல் எழுதினேன் .அப்போது அது நண்பர்களால் மிக விரும்பி படிக்கப்பட்டது .தற்போது அது ஈகரை தளத்தில் கிடைக்கக்கூடும் .மேலும் www.tamilsiddharsuvadigal.com என்ற தளத்திலும் சிங்கை நண்பர் சுதாகர் என்பவர் தொகுத்து வழங்கி இருக்கிறார் .அந்தத் தொடர் மனம் ,யோகம் ,ஞானம் இவைகளைஎனக்குப்புரிந்த விதத்தில் விளங்கியிருக்கும் .
இப்போதும் அதேபெயரில் அதன் அடுத்த பகுதியை எழுத எண்ணுகிறேன் .இதில் முதல் பகுதி தியானம் பற்றியது .

உலகின் அனைத்துப்பகுதியிலும் இப்போது எண்ணற்ற மக்களை கவரும் சொல் தியானம் .ஆனால் மிக அதிகம் பேர்கள் உண்மையில் அதன் உண்மையையும் ,பெருமையும் அறிந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே !

தியானம் என்பது ஆன்மீக வாழ்வில் மிக உயர்ந்த நிலை .அது வெறும் கண்களை மூடி அமரும் அமைதி பெறும் செயலல்ல .இப்போது பல குருமார்களால் அது பலவிதமாக நவீனப்படுத்தப்பட்டுவிட்டது ..பதஞ்சலி தனது எட்டு யோக படி நிலையில் தியானத்தை ஏழாவதாக வைக்கிறார் .

எது தியானம் என்பதில் பலருக்கும் பெரும் குழப்பம் இருக்கிறது .பலரும் மன ஒருமைப்பாட்டை தியானம் என்று எண்ணுகிறார்கள் எந்த மனிதனாலும் மனதை ஒரு பொருளிலின் மீது நிலை நிறுத்த இயலும் .
மனதை ஏதாவது ஒரு புறப்பொருளிலின் மீது குவிப்பது மனஒருமைப்பாடு அதன் உண்மையானப்பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது தியானம் !
மனஒருமைப்பாடு என்பதை சிறுவயதில் இருந்தே நம்மை அறியாமல் நாம் பயன்படுத்தித்தான் வருகிறோம் .ஒரு நல்ல கதைப்புத்தகத்தைப்படிக்கும் போது ,திரைப்படத்தை ஆழ்ந்து பார்க்கும் போது நாம் நம்மை மறக்கிறோம் .நமது புலன்கள் எப்போதும் வெளியேயே செல்லும் புலன்கள் அதிகம் வேலை செய்வதில்லை . அருகில் யாரும் வந்தாலோ ,பேசினாலோ நமது புலன்கள் அதை உணர்வதில்லை .மனம் குவிந்திருக்கிறது ஒரு புறப்பொருளில் மீது .அதுவே மன ஒருமைப்பாடு

ஆனால் தியானம் இதற்க்கு நேர்மாறானது அதாவது வெளிமுகமாக ஓடும் மனதை உள்முகமாக்கி அதன் பிறப்பிடத்தை நாடசெய்வதே தியானம் .

இயல்பாகவே புறத்தில் புலன்கள் மூலம் பாய்ந்தோடும் மனதை திருப்பு உள்முகமாக்குவது அத்தனை எளியக்காரியம் அல்ல .ஏனெனில் மனதை எங்கே ஒருமுகப்படுத்த வேண்டும் அதன் மையம் எங்கிருக்கிறது என்பது நமக்கு பெரும்பாலும் தெரியாது .தெரியாத இடத்தில் எப்படி மனதை குவிப்பது ?அது எங்கே இருக்கிறது என்றால் அதையே இதயத்தாமரை என்கிறோம் .அது லப் டப் என்று துடித்டுக்கொண்டிருக்கும் ,இரத்தத்தை ஏற்றி இறக்கும் நமது இதயம் அல்ல .ஆனால் அந்த ஆன்மீக இதயத்தின் இருப்பிடமும் அந்தப்பகுதியே .பலருக்கும் அந்த ஆன்மீக இதயம் மலராமல் அரும்பாகவே இருக்கிறது .அதை முதலில் அந்த இதயத் தாமரையை மலர செய்ய்யவேண்டும் .அதற்க்கு ஜபம் ,பிரார்த்தனை , பிரம்மச்சரியம் போன்ற பல சாதனைகள் தேவை .எனவேதான் பதஞ்சலி தியானத்தை ஏழாவது படியாகக்குறியிருக்கிறார் .அதற்க்கு போவதற்கு முன் ஆறு படிகளை கடந்தாகவேண்டும் .
இதையே திருமூலரும் கூறுகிறார்

திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது.

இயமம் – கொல்லாமை, வாய்மை,
நியமம் – தவம், மனத்தூய்மை
ஆசனம் – உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம் – உயிர்க்கும் உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருதல்.
.பிராத்தியாகாரம் – மனமானது, புலன்கள் வாயிலாக புறத்தே சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.
தாரணை – உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்;
தியானம் – கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு ஆன்மாவை உள்நோக்குதல்
சமாதி – விந்துநாதம் காணல்

இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.தியானத்திற்கு முதலில் நமது ஆன்மீக மையத்தை உணரவேண்டும் .அதை அறியாதவரை உண்மை தியானம் கைகூடாது .தியான வேளையில் மனம் அலைந்த க்கொண்டுதான் இருக்கும் .மேலும் மிகவும் சிரமப்பட்டு மனதை அதன்பிறப்பிடத்திற்கு உந்தித்தள்ளுவது அல்ல தியானம் .மாறாக உள்ளிருக்கும் நாம் மலர்ச்சி செய்த உயர் மனத்தால் நமது கீழ் மனம் ஈர்க்கப்படவேண்டும் .இயல்பாக மனம் உயர்மனத்தில் திரும்பவேண்டும் ,.அதற்க்கு முதலில் இதய தாமரையை மலர செய்யவேண்டும் .மொத்தத்தில் புறப்பொருள்களில் மனதைக்குவிப்பது மனஒருமைப்பாடு ,இயமம் நியமம் போன்ற ஆறு படிகளில் ஏறி இதயத்தாமரையை மலர்ச்சி செய்தபின் மனம் அங்கே இயல்பாக குவியும் நிலை தியானம் எனப்படும் .இன்னம் நிறைய சொல்ல இருக்கிறது அவைகளை அடுத்து காண்போம்                   அண்ணாமலைசுகுமாரன்

Comment here