Sliderவரலாறு

திருஉத்தரகோச மங்கை

Rate this post

 பாண்டிய நாட்டுப் பழம்பெரும் தலங்களில் ஒன்று “திருஉத்தரகோச மங்கை”. பார்வதிக்கு சிவபெருமான் #பிரணவ_மந்திரத்தை_உபதேசித்த_இடம். சிவத் தலங்களிலேயே பாடல்பெற்ற முதல் க்ஷேத்திரம் உத்தரகோசமங்கை.–#சிவன் உண்பதும் உறங்குவதும் உத்தரகோச மங்கை தலத்தில்தான் என்பார்கள். இத்தலத்தில்தான், “சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது இனியே’ என்று சிவபெருமானிடம் மாணிக்கவாசகர் கேட்கிறார்.
#நீத்தல்_விண்ணப்பம் :-
நீத்தல் விண்ணப்பம் என்ற பாடலை மனமுருகிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர். எல்லா சிவாலயங்களிலும் #அர்த்தஜாம_பூஜையில் பாடக்கூடிய ஊஞ்சல் பாடல் (திருப்பொன்னூஞ்சல்) உத்தரகோசமங்கை பாடல்தான்.–மங்களநாதர் பார்வை பட்டால் அனைத்துப் பாவங்களும் நம்மை விட்டோடும். உலகைப் படைத்து அதில் பெரும் மாயையைப் பரப்பிய நான்முகனாகிய பிரம்மனுக்கு ஒருசமயம் சொல்லொணாக் கோபம் தன்னையறியாமல் சூழ்ந்து உலகத்து உயிர்களை ஆட்டுவித்தது. தன்னுள் புதிதாக உருவான ராட்சத குணத்தையழிக்க பிரம்மா பலவாறு முயன்றார்.–இந்தத் தீவினையை அகற்ற தவத்தை நாடினார். தகுந்த இடத்தில் அமர்ந்து தவம்செய்தால் ஊழ்வினை அகலுமென்று எண்ணி உத்தரகோசமங்கை வந்தடைந்தார். அங்கே அக்னி தீர்த்தக் கரையில் கடும் தியானத்தில் ஈடுபட்டார்.–கோபமெனும் பாவத்திலிருந்து விமோசனம் கிடைத்தது. பிரம்மனுக்கு சிவன் இன்னருள் புரிந்த இடம் இதுவென்பதால், உத்தரகோசமங்கை “பிரம்மபுரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
#ஆலய_அமைப்பு :-
முதலில் நம்மை வரவேற்பது ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கும் இலந்தை மரமும், அங்கு வீற்றிருக்கும் சகஸ்ரலிங்கமும்தான். 
ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறிய லிங்கங்கள் பொதிந்திருப்பதுதான் சகஸ்ரலிங்கம். பதரி (இலந்தை) மரத்துடன் சிவபெருமான் வீற்றிருப்பதாலேயே இவ்விடத்துக்கு இலந்திகைப் பள்ளி என்றும், பத்ரிகா க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
சகஸ்ரலிங்கத்தை வேத வியாசரும் புஜண்ட மகரிஷியும் பூஜை செய்ததாகக் கூறுவர்.
இலந்தை மரத்தின்கீழ் வேத வியாசரின் பாதரட்சையும், அவர் வணங்கி பூஜை செய்த வலம்புரி விநாயகரும் இத்தலத்தின் பழம்பெருமையை உணர்த்துகின்றன.
#மரகத_நடராஜர் :-
இந்த ஆலயத்துக்கு அருகில் அக்னி தீர்த்தக்கரை அருகே மரகத நடராஜர் காட்சியளிக்கிறார். ரத்தினசபாபதி, ஆதி சிதம்பரேசன் என்றழைக்கப்படும் ஐந்தரை அடி உயரம் கொண்ட இந்த மரகத நடராஜருக்கு வருடம் முழுவதும் சந்தனக் காப்பு இடப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத திருவாதிரையன்று சந்தனப்படி கலைந்து விசேஷ அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினத்தில் மட்டும் நடராஜரை மரகத மேனியாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காப்பு அகற்றிய தினம் அதிகாலை மீண்டும் சந்தனம் வைத்து அருணோதய காலத்தில் தரிசனம் நடைபெறும். அதை ஆருத்ரா தரிசனம் என்று கூறுவர். அதைக் காண கண்கோடி வேண்டும். 
மற்ற நாட்களில் மரகத நடராஜருக்கு அபிஷேகம் இல்லையென்பதால், அதற்கு மாற்றாக சிறிய ஸ்படிகம் மற்றும் மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன. இவற்றை தரிசித்தாலே பச்சை வண்ண நடராஜரை தரிசித்த பலனில் பாதி கிட்டிவிடும் என்பர்.
மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கிறார் மங்கள நாதர். அவருக்குப் பக்கத்தில் தேவி மங்களநாயகி தனியாகக் காட்சி யளிக்கிறார். இவர்கள் இருவரையும் தரிசிப்பதற்குமுன், அங்கு வீற்றிருக்கும் பாண லிங்கத்தை தரிசித்தால் முழுமையான பிரார்த்தனைப் பலன் கிட்டும்.
திருமணம் கைகூடாதவர்கள் மரகத நடராஜருடன், சுவாமியையும் அம்பாளையும் தரிசித்து விமோசனம் பெறுகிறார்கள்.
இம்மையிலேயே நன்மை அனைத்தையும் நல்கி, மறுமையில் முக்தியைக் கொடுக்கும் தலமாக இது விளங்குகிறது. மாணிக்கவாசகருக்கு இங்கு தனிச்சந்நிதி உண்டு. இங்கு மாணிக்கவாசகர் சடையுடன் காணப்படுகிறார்.
இவ்வாலயத்தை தரிசிக்கும் பேறு அனைவருக்கும் கிட்டாது. தரிசிக்கவேண்டுமென்ற பாக்கியம் பெற்றவருக்கே கைகூடும். ஆருத்ரா தரிசன நாளில் மட்டும் இங்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழியும். நிறைய திருமணங்கள் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன.
 #அமைவிடம் :- 
ராமநாதபுரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உத்தரகோசமங்கை அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து வசதியுண்டு.
சமீபத்தில் இத்திருக்கோவிலில் தரிசனம் செய்யும் பெரும்பேறு இறைவன் அருளினார்.
திருஉத்திரகோசமங்கைக்கு  அரசே போற்றி!!
ஓம் நமச்சிவாய

Comment here