திருப்பதி லட்டு விலை இருமடங்கு உயர்வு!

5 (100%) 1 vote

திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றாலே, நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அங்கு பிரசாதமாக கொடுக்கப்படும் ‘லட்டு’ தான். அந்த ‘லட்டு’ உருவான வரலாற்றை இங்கு தெரிந்துகொள்வோமா?..கி.பி.830ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர்கள் ஆட்சி காலத்தில், ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல வேண்டுமென்றால் பல நாட்கள் ஆகும். தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீடுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.

மேலும் ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லட்டு விலை ரூ.25 ஆக உள்ளது. இதன் பெயர் ‘ப்ரோக்தம் லட்டு’. இது தவிர, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் “கல்யாண உற்சவ லட்டு” வழங்கப்படுகிறது, ஒரு லட்டு ரூ.100க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் தனியார் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு, வடை ஆகியவற்றின் விலையைத் திருப்பதி தேவஸ்தானம் இரு மடங்காக உயர்த்தியுள்ளது.

ஆம். தற்போது தினமும் திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்குப் பிரசாதமாக தேவஸ்தானம் சலுகை விலையில் லட்டு வழங்கிவருகிறது. அதன்படி, நாள்தோறும் சுமார் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. முன்னரே குறிபிட்டது போல் பக்தர்களுக்கு 10 ரூபாய்க்கு 2 லட்டுகளும், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு 10 ரூபாய்க்கு 2 லட்டுகளும், கூடுதலாக 25 ரூபாய்க்கு 1 லட்டு எனவும் வழங்கப்படுகின்றன. மேலும் 50 ரூபாய், 300 ரூபாய் ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்த ஒரு லட்டைத் தயார் செய்ய 37 ரூபாய் செலவாகிறது. இதைச் சலுகை விலையில் கொடுப்பதால் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலையை தேவஸ்தானம் இருமடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது.

Laddu prasadam for Vaikunta Ekadashi 2015, Enarada.com

தற்போதைய விலை விவரங்கள்:

* 25 ரூபாய்க்கான லட்டை, 200 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு 50 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

* 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கல்யாண உற்சவ லட்டை, 10 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு 200 ரூபாய்.

* 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வடையை 10 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு வடை 100 ரூபாய்.

* 3.50 ரூபாய்க்கு விற்கப்படும் சிறிய லட்டை 1000 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு 7 ரூபாய்.

தேவஸ்தானம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இரு மடங்கு விலையில் லட்டு வழங்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பழைய விலையிலேயே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*