சினிமா

திரை விமர்சனம்: கிடாரி

                  துரோகம் ஒருவனது ரத்தத்தில் கலந்து ஓடினால் அதன் விளைவு என்னவாக மாறும்? அதுதான் இந்த ‘கிடாரி’.

கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, மிரட்டல் என்று திரிகிறார் பெரியவர் கொம்பையா பாண்டியன் (வேல.ராமமூர்த்தி). அவருக்கு வலது கையாக, கிட்டத்தட்ட ஒரு மகனாகவும் இருக்கிறார் கிடாரி (சசிகுமார்).

ஆட்டுச் சந்தை, ரைஸ் மில் என்று தன் கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, அடிதடியில் இறங்கி ரத்தம் பார்த்து ஊரில் பெரும் பகையைச் சேர்த்து வைத்திருக்கிறார் கொம்பையா பாண்டியன்.

இந்நிலையில், வேல.ராமமூர்த் தியை, அடையாளம் தெரியாதவர்கள் கழுத்தில் வெட்டிவிடுகிறார்கள். ஊரில் பதற்றம் பீறிட, அவரை வெட்டியது யார் என்பதை நோக்கிக் கதை விரிகிறது.

அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் ஒவ்வொரு கதாபாத்திரத் துக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக வேல.ராமமூர்த்தி, அவரது சம்பந்தியாக வரும் மு.ராமசாமி, மகனாக நடித்திருக்கும் வசுமித்ர ஆகியோரின் கதாபாத்திரங்கள் பாராட்டுக்குரியவை. வாழ்வியல் பின்னணியில் கதை சொல்ல வரும் போது கதாபாத்திரங்களை வடி வமைப்பது மட்டுமே போதாது. படத்தை நகர்த்திச் செல்ல வலுவான கதையும் காட்சிகளும் தேவை. முதல் பாதியில் திரைக்கதை அங்கும் இங்கும் மாறி மாறிச் சுற்றிக்கொண்டிருக்கிறது. நகரும் வேகமும் குறைவு.

கொம்பையா பாண்டியனுக்கு ஊரில் யார் யாரெல்லாம் பகையாளி கள் என்று போகும் திரைக்கதை ஓட்டம், முதல் பாதிக்குப் பிறகும் நீள்கிறது. இதைச் சுருக்கிவிட்டு, அதன் பிறகு என்ன நடக்கிறது என் பதைக் காட்ட இயக்குநர் மெனக் கெட்டிருக்கலாம்.

வன்மம்தான் படத்தில் பிரதானம் என்பதால் காதல் காட்சிகளுக்குப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சசிகுமார், நிகிலா விமல் சந்திக்கும் இடங்கள் காட்சிக்கும் ஒட்டவில்லை, பார்வைக்கும் ஒட்டவில்லை. நிகிலா வின் நடிப்பு ‘நாடோடிகள்’ அனன்யா கதாபாத்திரத்தை நினைவு படுத்துகிறது. இருந்தாலும் சில இடங்களில் தனித்து நிற்கிறார். மு.ராமசாமி சொல்லச் சொல்ல ப்ளாஷ்பேக்கில் நகர்ந்து செல்லும் திரைக்கதையில் சசிகுமார், நிகிலா காதல் காட்சிகள் எப்படிச் சேர முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

ரத்தம், பகை சேர்த்தல் என்று ப்ளாஷ்பேக்கில் தொய்வுடன் நகரும் திரைக்கதை, சுஜிபாலாவின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்குகிறது. கிடாரியைப் பழிவாங்க சுஜிபாலா முன்வைக்கும் திட்டங்கள் படத்தின் போக்கை த்ரில்லாக மாற்றுகிறது.

தன் கன்னத்தில் அறைந்த வசுமித்ரவை எதுவும் செய்யாமல் வீட்டை விட்டு வெளியேறி எல் லோருக்கும் பயத்தைக் காட்டும் சசிகுமாரின் பகுதி அழகு. சில நிமிடங்கள் என்றாலும் திருப்பு முனையாக அமைந்த நெப்போலி யன் வரவும் சிறப்பு. படம் எந்தக் காலகட்டத்தில் நகர்கிறது என்பதை சொல்லவில்லை. அந்தக் கேள்வி யைத் திரைக்களமும் உருவாக்க வில்லை.

அரிவாள், ரத்தம், மீசை முறுக்கு என்று சசிகுமாரின் வழக்கமான களம்தான். இருந்தபோதில் அவரது உடல்மொழியிலும் பேச்சிலும் சற்று வித்தியாசம் தெரிகிறது. இவர்தான் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு வேல.ராமமூர்த்தியின் நடிப்பும் கச்சிதம்.

காமெடி கலந்த வில்லனாக மாறும் ஓஏகே சுந்தரின் புலிக்குத்தி பாண்டியன் கதாபாத்திரம் பெரிதாக எடுபடவில்லை. ‘‘கிடாரி என் சிஷ்யன். அவன் என் பேச்சுக்கு மட்டும்தான் கட்டுப்படுவான்’’ என்ற தொனியில் படம் முழுக்கப் பேசும் பெரியவரின் காமெடி கொஞ்சம் சிரிக்கவைக்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் நேர்த்தியான உழைப்பு, படத்துக்குப் பலம். படம் முழுக்கத் தெறிக்கும் வன்மத்தையும், ரத்தத்தையும் எடிட்டர் பிரவீன் ஆன்டனி சாதுர்ய மாகக் கையாண்டிருக்கிறார். பாடல் கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் தர்புகா சிவா.

வன்மம், வன்முறை, கதாபாத் திரங்கள் இவற்றை மட்டுமே நம்பி களம் இறங்கியிருக்கும் கிடாரி இந்த மூன்று அம்சங்களுக்காக மட்டுமே கவனத்தில் நிற்கிறது.

Comment here