தொழில்வேளாண்மை

தென்னை மரத்திலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி!

தென்னைகளுக்குப் பெயர் போன கேரளாவில், விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக தென்னை மரத்தில் இருந்து நீரா பானத்தை இறக்கிப் பதப்படுத்தி விற்பனை செய்ய அனுமதி உள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும் நீரா உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த 18/4/2017 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில், தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நீரா உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

அது குறித்து அரசு அப்போது வெளியிட்ட செய்தி அறிக்கையில், ”தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி தென்னை மரங்கள் 10.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியிலும், உற்பத்தித் திறனிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது.

தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தினை இறக்கி, பதப்படுத்தி, விற்பனை செய்ய அனுமதி வழங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

“நீரா” என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத, உடல்நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கையான ஊட்டச்சத்து பானமாகும். “நீரா” பானத்தில், வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது.

தென்னை வளர்ச்சி வாரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தை பயன்படுத்துவதால், “நீரா” பானம் நொதிக்காமல் இயற்கைச் சுவை மாறாமல் நீண்டநாள் சேமித்து பயன்படுத்த முடியும்.

ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். “நீரா” பான உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டு வருமானம் சுமார் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டாலும் ஒரு சில காரணங்களால் அது அப்போது நடைமுறை படுத்தப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழக அரசு நீரா உற்பத்தி விதிகள் அடங்கிய `தமிழ்நாடு நீரா விதிகள் 2017′ என்ற உத்தரவைப் பிறப்பித்து விட்டது. இந்த உத்தரவுப்படி, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய சட்டப்படி முறையான அனுமதியை பெற்றிருக்கும் தேங்காய் உற்பத்தியாளர் நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கங்கள் இதற்கான உரிமங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி, “தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் நீராவை விற்பனை செய்யவும், அதிலிருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யவும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்கப்படும். இந்த உரிமம் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதி வரை செல்லத்தக்கது. ஏதாவது, விதி மீறலில் ஈடுபட்டால் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்” என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comment here