சினிமா

நடிகர்கள் போற்றும் நல்லாசான் எம்.என்.நம்பியார்…!

Rate this post
தமிழ்த்திரை உலகில் வில்லத்தன நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் எம்.என்.நம்பியார். எனது 12 வயதில் நம்பியாருடன் முதல் சந்திப்பு நடந்தது. எனது மாமா நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் அமைச்சராக இருந்தார். அவரது மகன் அர்ஜூன் மன்றாடியார். இவர் என் தங்கையின் கணவரும் ஆவார். இவரும், நம்பியாரின் மகன் சுகுமாரும் கல்லூரி தோழர்கள். அர்ஜூனுடன் நம்பியார் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்று இருந்தார்.
திரைப்படங்களில் வில்லனாக நடித்து இருந்தாலும், நிஜ வாழ்க்கையில், நல்லவராக, நகைச்சுவை உணர்வு உள்ளவராக, எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவராக, அனைத்து நடிகர்களும் போற்றி மதிக்கத்தக்க நல்லாசானாக திகழ்ந்தார். ஒரு படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அந்தப்படத்தில் நம்பியாரும் நடித்தார். அப்போது கதாநாயகன் என்னை ஓங்கி அடிக்கும் காட்சி இடம் பெற்றது. நான் நடிப்பில் பாராட்டு வாங்க வேண்டும் என்பதற்காக தரையில் உருண்டு புரண்டு வேதனையோடு துடிப்பதை போல் நடித்தேன். நடித்து முடித்ததும் நம்பியார் என்னிடம் வந்து நீ எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் கதாநாயகனைத்தான் எல்லோரும் பாராட்டுவார்கள். நீ பெயர் வாங்க முடியாது. அதனால் நீ கவனமாக நடிக்க வேண்டும். உடல் நலனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பெருந்தன்மையுடன் அறிவுரை கூறினார்.
அந்தக்காலத்தில் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. தாய் நாடு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது நம்பியார் சாமியும் நடித்தார். அவர் முன் நின்று புகைப்பிடிப்பதை தவிர்க்கும் விதத்தில் மறைவான இடத்துக்கு சென்று ஒளிந்து நின்று புகைப்பிடித்தேன். பின்னர் சூட்டிங் தளத்திற்கு சென்றதும் சிகரெட் வாடை வீசியதை உணர்ந்த நம்பியார் ‘என்ன தம்மா’? என்று கிண்டலாக கேட்டார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது அன்று முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன்.
நம்பியார் வசித்து வந்த வீடு இன்று அடுக்குமாடி கட்டிடமாகி விட்டது. அங்குதான் என் மகன் சிபி வசித்து வருகிறான். எனது பேரன் தீரன், இன்னொரு பேரன் சமரன் ஆகியோர் நம்பியார் சாமி வீட்டைச் சுற்றி தான் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு நாள் நம்பியார் சாமி என்னிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நீ எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் போன்ற கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும். சரித்திர படங்களிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவரது அறிவுரை என் ஆழ்மனதில் பதிந்தது. அதன்படியே பாகுபலி படத்தில் ‘கட்டப்பா’வாக நடித்தேன்.
எனக்கும், நம்பியாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் மே மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமாட்டேன். குன்னூரில் உள்ள பங்களாவுக்கு சென்று விடுவேன். அதைப் போல நம்பியாரும் ஊட்டிக்கு சென்று விடுவார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த நம்பியார் 1952-ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த மர்மயோகி படத்தில் காமெடியனாக நடித்தார். அதற்கு பிறகு தான் ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற படங்களில் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். நம்பியாருடன், நான் நீதியின் நிழல், சந்திப்பு, தாய்நாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறேன். படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார். படங்களில் நடிக்கும்போது ஒட்டுத்தாடி மீசை வைத்துக் கொள்வது அசவுகரியத்தை ஏற்படுத்தும். அரிப்பு ஏற்படும். அந்த மாதிரியான நேரங்களில் டைரக்டரிடம் சென்று காட்சியை படம் பிடிக்கும்போது அதை வைத்துக்கொள்கிறோம் என்று கூறி விடுவேன். இது போன்ற காட்சிகளில் நடிக்கும்போது நம்பியார் சாமி வீட்டில் இருந்து புறப்படும் போதே மீசை, தாடியை ஒட்டிக்கொண்டு வந்து விடுவார்.
படப்பிடிப்பு நேரங்களில் அவரது வீட்டில் இருந்து வரும் உணவைதான் சாப்பிடுவார். வெளிப்புற படப்பிடிப்பின் போது சமையல் செய்வதற்காக மனைவியை உடன் அழைத்து செல்வார். அவரது வீட்டில் தயார் செய்த உருளைக்கிழங்கு பொறியல் பிரமாதமாக இருக்கும்.
ஜல்லிக்கட்டு படத்தின் 100-வது நாள் வெற்றி விழா 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போது முதல்-அமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. விழாவில் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நம்பியார் சாமி, நான் உள்பட அனைத்து கலைஞர்களும் கலந்துகொண்டோம். அனைவருக்கும் எம்.ஜி.ஆர். விருது வழங்கி கவுரவித்தார். சிவாஜி சாருக்கு விருது வழங்கும் போது அன்பின் மிகுதியால் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு விருது வழங்கி வாழ்த்தினார். அடுத்து விருது வாங்க வந்த நம்பியார் எனக்கும் முத்தம் தந்தால் தான் விருதை பெற்றுக்கொள்வேன் என்று கூறி விருதை பெற்றுக்கொள்ள மறுப்பதைப்போல பாவனை செய்தார். உடனே எம்.ஜி.ஆர். சிரித்துக்கொண்டே அது ‘ஸ்பெஷல் முத்தம்’ என்று கூற அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. இதைப் பார்த்துக்கொண்டு அருகில் நின்ற சிவாஜி சார் நம்பியாரின் முதுகில் செல்லமாக தட்டினார். உடனே எம்.ஜி.ஆரும் சிரித்துக்கொண்டே நம்பியாருக்கு முத்தமிட்டு விருதை வழங்கினார். அன்று அவர்கள் 3 பேரும் மேடையில் சிறு குழந்தைகள் போல் நடந்து கொண்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இன்னொரு சம்பவம். நான் கதாநாயகனாக நடித்த படத்தில் நம்பியார் சாமியும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி தயாரிப்பாளரிடம் முன் பணம் வாங்கி இருந்தார். அந்தப்பட தயாரிப்பாளர் சரியாக நடந்து கொள்ளாததால் அதில் நடிக்க நம்பியார் சாமி மறுத்துவிட்டார். இருந்தாலும் தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க நினைத்த அவர், அவரிடம் நேரில் கொடுக்க விரும்பாமல் என்னிடம் கொடுத்து அதை அவரிடம் கொடுத்து விடும்படி கூறினார். என்னிடம் ஏன் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு நீதானே படத்தின் கதாநாயகன் அவரிடம் நான் நேரில் சென்று கொடுத்தால் பிரச்சினை ஆகிவிடக்கூடாதே என்று நினைத்து தான் உன்னிடம் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். நடிப்பின் சிகரமாக விளங்கி மக்கள் மனம் கவர்ந்த நம்பியார் மறைந்து விட்டாலும் அவர் நடித்த படங்கள் மூலம் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Comment here