அரசியல்

நடிகர் கமல்ஹாசன் அழைத்துள்ள விவசாயிகள் கூட்டத்தில் நல்லகண்ணு கலந்துக்க மாட்டார்!

Rate this post

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெறும் விவசாய சங்கங்களின் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு பங்கேற்க ஒப்புதல் அளிக்கவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் சார்பில் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் சென்னை பெரியமேட்டில் வரும் 19-ம் தேதி நடைபெறும் என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அக்கூட்டத்தில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ ஆர். நல்லகண்ணு ஒப்புதல் அளிக்கவில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். விவசாய சங்சங்களின் பிரதிநிதிகள் சிலர் ஆர். நல்லகண்ணுவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆர். நல்லகண்ணு, திமுக தலைமையில் 9 அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை அவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அவர் மாநாட்டில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ ஒப்புதல் அளிக்கவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Comment here