சினிமா

“நன்றியுள்ள பிரேம்ஜி… கீரவாநீ…’’ எப்படியிருக்கிறது தமிழின் முதல் ஸ்டோனர் திரைப்படம்

Rate this post

கஞ்சா போன்ற போதைப் பொருள்களால் ஆட்கொள்ளப்பட்டு, அதில் படத்தில் இருப்பவர்கள் அடிக்கும் லூட்டிகளும் அதனால் ஏற்படும் காமெடி கலந்த சம்பவங்களுமே ஸ்டோனர் திரைப்படங்கள். பரத், பிரேம்ஜி நடிப்பில் வெளிவந்துள்ள `சிம்பா’ திரைப்படம் இந்த வகை சினிமா என்பது குறிப்பிடத்தக்கது. சில இரட்டை அர்த்த வசனங்களும், சற்றே அடல்ட் காட்சிகளும் இருந்தாலும், படத்துக்கு சென்சார் சான்றிதழாக U-வை வழங்கியிருக்கிறார்கள். படம் முழுக்கவே நாயகன், துணை நாயகி, எல்லோரும், கஞ்சாவின் மயக்கத்தில் இருப்பவர்களாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் Statuatory Warning-உடன் இதற்கான விமர்சனத்தை எழுதுகிறோம். ‘U’ சர்டிபிகேட் என்றாலும், குழந்தைகளுடன் செல்லலாமா என்ற கேள்விக்கு இந்தப் படம் உகந்த ஒன்றாகத் தெரியவில்லை. அதை உங்களின் தீர்மானத்துக்கே விட்டுவிடுகிறோம்.

Simba

தன் தாத்தா இழந்த துக்கம் தாளாமல் 24*7 கஞ்சாவில் இருக்கிறான் மகேஷ் (பரத்). பக்கத்து வீட்டில் குடிவரும் நாயகி, ஓர் அவசர வேலையாக அவள் வளர்க்கும் கிரேட் டேன் நாயை மகேஷிடம் விட்டுவிட்டுச் செல்கிறாள். கிரேட் டேன் நாயான சிம்பாவோ, மகேஷுக்கு மனித உருவில் (பிரேம் ஜி) தெரிகிறது. இருவருக்குமான உரையாடல், மகேஷின் காதல், சிம்பாவின் காதல் என விரிகிறது இந்த `சிம்பா’.

Simba

வித்தியாசமான வீடு, வீட்டுக்குள் கஞ்சா செடி, கலர் கலரான போஸ்டர்ஸ், வின்டேஜ் கார், அனிமேஷன் கதை, நாயகி பிம்பம், நாய்களுக்கானப் போரில் பழைய நடிகர்களின் குரல், த்ரிஷாவின் நாய் எனப் பலவற்றை தன் முதல் படத்திலேயே செய்துகாட்டி ஆச்சர்யப்படுத்துகிறார், அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அதிலும், வேலைபார்க்கும் கூடாரங்களைக் கோழிப் பண்ணைகள் ஆக்கியதெல்லாம், கோலிவுட்டின் ஹாட் போதை புதுவரவு அரவிந்த் ஸ்ரீதர்.

படத்தில் மாறி மாறி வரும் Point of View Shots, போதை மனிதரின் மூளைக்குள் ஏற்படும் மாற்றம், கட்ஸ் என சினு சித்தார்த்தின் கேமரா ஒருவித போதையிலேயே இருக்கிறது. படத்தின் எடிட்டிங்கும் தாறுமாறாகச் செல்கிறது. இன்டர்வெல்லில் நமக்குமே தலையைச் சுற்றி பட்டாம்பூச்சி சுற்ற ஆரம்பிக்கிறது. `ஜில் ஜங் ஜக்’கில் வித்தியாசமான டியூன்களால் வெரைட்டி காட்டி விஷால் சந்திரசேகர், இந்தப் படத்திலும் செம்ம! அதிலும், ஒரு ஸ்டோனர் படத்தில் முத்தாய்ப்பாகச் சிம்பு குரலில் ஒரு பாடல். சிம்புவின் குரலில் திரையரங்க ஸ்பீக்கரிலும் கொஞ்சம் அளவான போதை கசிகிறது.

Simba

நாய்களின் லிப்-சிங்க்கூடச் சரியாக அமைந்தவொரு படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தின் லிப்-சிங் ஒட்டாதது சற்று உருத்தல். அவ்வளவு இலகுவாக நாயின் மூலம் கிடைத்த ஒரு திரைக்கதைக்கு, புதிய வில்லன், காமாசோமா காதல் என இரண்டாம் பாதியில் ‘சிம்பா’ மீண்டும் கோலிவுட்டில் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. தொடர்ச்சியை எதிர்பார்க்கக்கூடாத சினிமாதான் என்றாலும், எந்தக் காட்சியிலும் அழுத்தமே இல்லாமல் செல்லும் கதையுக்தி தமிழுக்குப் புதிது என்பதால், பெரிய ஈர்ப்பு ஏற்பட மறுக்கிறது. சுவாரஸ்யமற்ற சில காட்சிகளும், ஒரு நல்ல ஷார்ட் பிலிம்மை இழுக்கிறார்களோ… என எண்ண வைக்கிறது. மேலும், எத்தனை பேரால் இதைத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறி.

வித்தியாசமான ஒரு சினிமா அனுபவம், காமெடி, டைம்பாஸ் வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்தை தேர்வு செய்யலாம். 

Comment here