நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்.

Rate this post

மனிதனுக்கு அவசியம்

மனிதனிடம் சத்தியம்,

பொறுமை, தைரியம், கொடைகுணம், சோம்பலின்மை

ஆகிய ஐந்து குணங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.

மனிதனை அறியும் வழி

ஒருவனுடைய அறிவை-

அவன் செய்யும்

செயல்களால் அறிய வேண்டும்,

பேச்சினால் அல்ல.

தற்பெருமை, பேராசை, கஞ்சத்தனம் ஆகிய மூன்றும்-

மனிதனைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும்.

கருணை உடையவர்க்குத் துன்ப உலகு(நரகம்) இல்லையாம்.

*வாழ்வு நீதி*

பொய்ம்மை இல்லாதவர்களுக்குத் தேவர் உலகில் நிலையான

இடம் உண்டு.

தீயசெயல்களைச் செய்பவனிடத்தில் வறுமை

வந்து சேரும்.

மற்றவரைப் பற்றிப் புறங்கூறுபவரை உலகத்தார் பழிப்பர்.

உயர்ந்தவர்களுடன் நட்புக் கொண்டால் நீ உயர்ந்தவன் ஆவாய்

*பொறாமை*

பொறாமையைவிட கேடு விளைவிப்பது வேறொன்றும் இல்லை.

பிறர் பொருளை விரும்பாதவனிடம்

செல்வம் குவியும்.

*தவம்*

பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாதிருப்பதே தவம்.

நல்ல வழியில் வந்த செல்வம் தான் சந்ததிகட்குப் பயன்படும்

*அன்பு*

உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.

தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.

அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.

*மறத்தல்*

பிறர் நமக்குச் செய்தத்

தீமையை மறத்தல் வேண்டும்.

பிறர் நமக்குச் செய்த

நன்மையை மறத்தல் கூடாது

*வாழ்க்கை தத்துவம்*

ஆசைகள் குறையும் பொழுது அமைதி பெருகுகிறது.

*செய்ய வேண்டியவை*

சொல்லாலும் செயலாலும் பிறருக்கு உதவுவது சிறந்த வழிபாடாகும்.

நல்ல எண்ணங்கள் மனித உடலைப் புனிதமாக்கும்.

நல்ல எண்ணங்களே மனித வாழ்க்கையைத் தெய்வீகமாக்கும்.

*இருக்காது*

பொறாமை உள்ளவனிடம் புண்ணியம் இருக்காது !

சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது !

பேராசை உள்ளவனிடம் நாணம் இருக்காது !

சோம்பல் உள்ளவனிடம் செல்வம் இருக்காது !

உறுதி இல்லாதவனிடம் எதுவும் இருக்காது !

*பிறவியும் வழிபாடும்*

இம்மைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் அதமர் !

மறுமைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் மத்திமர் !

எதையும் விரும்பாமல் இறைவனை வழிபடுபவர் உத்தமர் !

*மனமும் மனிதமும்*

பிறர் கெட்டாலும் தான் மட்டும் வாழவேண்டும் என நினைப்பவன் அரக்கன் !

பிறரும் வாழவேண்டும் தானும் வாழவேண்டும் என நினைப்பவன் மனிதன் !

தான் கெட்டாலும் பிறர் வாழவேண்டும் என நினைப்பவன் தெய்வம் !

*கொடுக்காது*

புண்ணியம் துன்பத்தைக் கொடுக்காது !

பாவம் இன்பத்தைக் கொடுக்காது !

கருமிகள் இன்ப உலகை அடையவே முடியாது !

*வராததும் பெறுவதும்*

மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்துவிடாது.

படிப்பதால் அறிவு வளருமே தவிர ஒழுக்கம் வந்துவிடாது.

அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியைப் பெறலாம்.

சான்றோர் உறவால் ஒழுக்கத்தைப் பெறலாம்.

*பக்தியும் அறிவும்*

அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்.

இறை உணர்வு (பக்தி) இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம்.

*தெய்வபக்தி*

உண்மையான தெய்வபக்தி உள்ளவனிடம் தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.

*ஆணவம்*

ஆணவம் தேவர்களையும் அசுரர்களாக மாற்றிவிடும்.

அடக்கம் மனிதர்களைத் தேவர்களாக்கும்.

*நிந்திக்கின்றவர்களையும் வந்தியுங்கள்*

காரணமில்லாமல் (பொறாமையினால்)

ஒருவர் நம்மை நிந்தித்தால்,

நாம் செய்த பாவத்தில்

ஒரு பகுதி அவரைச்

சென்று சேரும்.

அத்துடன் அவர் செய்த புண்ணியத்தில் ஒரு பகுதி

நம்மை வந்தடையும்.

எனவே நம்மை நிந்திக்கின்றவர் களையும் நாம் வந்திக்க (வணங்க) வேண்டும்.

*வாழ்வின் நோக்கம்*

வாழ்வின் நோக்கம்

மனம் அடங்குவதே.

மனம் அடங்கினால்

சினம் அடங்கும்.

சினம் அடங்கினால்

சிவம் விளங்கும்.

எனவே, கற்பதன் நோக்கம் கடவுளை அடைவதே ஆகும்.

*நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்.*

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*