Uncategorized

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி ராகுல் காந்தி அறிவிப்பு

Rate this post

லக்னோ, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்த்து உள்ளன. இதில் உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் இடம்பெற்று உள்ளன. அதேநேரம் உத்தரபிரதேசத்தில், இந்த கட்சிகள் காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விட்டு உள்ளன.

இதனால் தனி மரமாக நிற்கும் காங்கிரஸ் கட்சி, உத்தரபிரதேசத்தில் தேர்தலை சந்திப்பது எப்படி? என்பது குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களிடம் கூறியுள்ளார். மேலும் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காகவே பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இணைந்திருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு எதிராக எந்த விரோதமும் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சோனியா மற்றும் ராகுல் ஆகியோரின் சொந்த தொகுதிகளான முறையே ரேபரேலி மற்றும் அமேதியில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் அறிவித்து இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் போட்டியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தில் தனித்து போட்டியிடுவது என்ற ராகுல் காந்தியின் முடிவால் கட்சியின் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்து இருப்பதாக மாநில பொதுச்செயலாளர் வினோத் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த நிலையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பதற்காக ராகுல் காந்தி நேற்று உத்தரபிரதேசம் சென்றார். அவரை மாநில கட்சித்தலைவர் ராஜ்பப்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) பிற்பகலில் டெல்லி திரும்புகிறார்.

Comment here