அரசியல்தமிழகம்

நீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம்: அதிமுகவில் இணைந்தவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா உரை

                       நீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம், அதிமுக ஜனநாயகம் நிலவும் கட்சி என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராயப்பேட்டையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உட்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களை வரவேற்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உரையாற்றினார்.

அப்போது, நீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம். அரசியல் கட்சிகளிலேயே ஜனநாயகம் நிலவும் கட்சி அதிமுகதான். நீங்கள் எந்த நம்பிக்கையுடன் கழகத்தில் இணைய வந்திருக்கிறீர்களோ அது ஒரு போதும் வீண் போகாது.

அதிமுக லட்சியம் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வளமான தமிழகத்தை படைத்து எல்லோரும் பயன்பெற வேண்டும். சிறந்த ஆட்சியை பெற வேண்டும் என்பதை உணர்ந்துதான் எனது தலைமையில் கழகப் பணியாற்ற வந்துள்ளீர்கள்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார்.

Comment here