தமிழகம்பொது

நீர்ப்பாசனத்திற்காக மஞ்சளாறு அணை

மஞ்சளாறு அணை

மஞ்சளாறு அணை இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஆற்றின் மஞ்சளாறு குறுக்கே அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு எனும் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் ஆற்றின் குறுக்கே, நீர்ப்பாசனத்திற்காக மஞ்சளாறு அணை கட்டப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை பாசனவசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் கர்ம வீரர் காமராஜரால் துவக்கப்பட்டு முன்னாள் முதல்வர் பக்தவசலத்தால் திறக்கப்பட்டது.

மேற்குமலைத்தொடர்ச்சியில் உள்ள தலையார் அருவி, மூலையார் அருவி, வறட்டாறு அருவி மூன்றும் ஒன்று சேர்ந்து மஞ்சளாறு ஆக வருகிறது. மஞ்சளாறு அணை தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதிக்காகவும் பயன்படுகிறது.

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் டம்டம்பாறை என்ற இடத்தில் மஞ்சளாறு அணையின் எழில்மிகு தோற்றத்தை கண்டு ரசித்து புகைப்படம் எடுப்பது இன்றைக்கும் வழக்கமாக உள்ளது. இந்த அணைக்கட்டில் மீன்வளர்ப்புத்தொழிலும் நடைபெறுகிறது.

மற்ற அணைகளைக்காட்டிலும் இயற்கையாக எந்த வித ரசாயண கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல் அருவியில் இருந்து நேரடியாக வருவதால் இங்கு வளர்க்கப்படும் மீன்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.

இந்த அணையின் நீர் மட்டம் 58 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 488.35 மி.க.அடியாகும். தேனி மாவட்டத்தில் 3149 ஏக்கர் பரப்பளவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.

அணையில் பூங்காக்கள் உள்ளது. அணையை சுற்றிலும் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்டும், மாலை வேளையில் சூரியன் மறையும் காட்சி தண்ணீரிலிருந்து மலையினுள் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும். அணையின் பின்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு காட்டுமாடு, சிறுத்தை புலி, மான் வகைகள் சுதந்திரமாக நடமாடுவதை காணலாம். மஞ்சளாறு அணையில் உணவகங்களோ, கடைகளோ இல்லை.

Comment here